புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வரைவாளர்களுக்கு 3 மாதம் பயிற்சி வகுப்பு: தி.மலை கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      திருவண்ணாமலை
photo03

 

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், நில அளவை பதிவேடுகள் துறை சார்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வரைவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சென்னை மண்டலத்தை சேர்ந்த 61 நபர்களுக்கு நடைபெற்ற 3 மாதம் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதில் வருவாய் கோட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் ஜி.ரூப்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நில அளவை பதிவேடுகள் துறைக்கு சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை, விழுப்புரம், திருவள்ளுர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த 61 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பணியாளர்களுக்கு நேற்று முதல் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

நில அளவை பதிவேடுகள் துறையில் வரைவாளர் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். களப் பணியாளர்கள் களத்தில் செய்யும் பணிகளை எவ்வாறு உள்ளதோ அதனை அவ்வாறே அளவுகளுக்கு ஏற்றது போல் வரைந்து புலத்தை பிரதிபலிக்கும் வகையில் தயாரிப்பதாகும்.

மேலும், மேற்படி புலங்கள் வரைவாளர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு புலங்களுக்கும் பரப்பு துல்லியமாக கணித்து சரி பார்க்கப்படுகிறது. நில அளவை பராமரிப்பு பிரிவு ஆவணங்கள் அனைத்தும் வரைவாளர்களால் பராமரிக்கப்படுகிறது. களப் பணிளாளர்களால் செய்யப்படும் புதிய உட்பிரிவு மாறுதல்கள் உடனுக்குடன் இன்றைய நிலையை பிரதிபலிக்கும் வரையில் வட்ட ஆவணங்கள் மற்றும் கணிணியில் உடனுக்குடன் பதிவு மாற்றங்கள் வரைவாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. புலப்படம், கல் வரைபடங்கள், கிராம விரைபடங்கள், வட்ட வரைபடங்கள் மற்றும் மாவட்ட வரைபடங்கள் அனைத்தும் அந்தந்த அளவுகளுக்கு ஏற்ப வரைவாளர்களால் வரைவு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து