பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      நீலகிரி

நீலகிரியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறினார்.

229 அபாயகரமான பகுதிகள்

கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழை குறித்து முதன்மை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் பயிற்சி முகாம் அங்குள்ள வெள்ள நிவாரண மைய கட்டிடத்தில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு பேசியதாவது

நீலகிரி மாவட்டத்திற்கு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் கிடைக்கப்பெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 229 அபாயகரமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஒரு குழுவிற்கு 10 பேர் வீதம் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. இந்த 229 இடங்களில் அபாயகரமான பகுதிகள் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் தான் உள்ளது. சத்யசாய் பேரிடர் மீட்பு குழுவானது எல்லா மாவட்டங்களிலும் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த நிறுவனம் இந்த வாரம் முழுக்க நீலகிரி மாவட்டத்தில் பணியாற்ற உள்ளனர்.

24 மணி நேரமும் அழைக்கலாம்

மழை மற்றும் வெள்ளம் நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்கள் என 466 இடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் பேரிடர் காலங்களில் 1077 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பேரிடர் காலங்களில் அனைத்து அதிகாரிகளும் மிக பொறுப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.  அதன்பின்னர் பேரிடர் காலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து நடத்தப்பட்ட ஒத்திகையையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து கோத்தகிரி அரசு உயர்நிலைப்பள்ளியின் சத்துணவு கூடத்தினையும், பொருட்களின் இருப்பினையும் ஆய்வு செய்தார். இம்முகாமில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து