முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீ அமிர்தலிங்க சுவாமிகள் மடாலய வரலாறு

வியாழக்கிழமை, 2 நவம்பர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

வேலூர் நகரின் மத்திய பாகத்தில் நகர் நடுவில் நல்லான்பட்டர என்று வழங்கப்படும் பகுதியில் சந்நதி தெருவில் ஸ்ரீ ரங்கூன் இராமசாமி முதலியார் திருமண மண்டபத்திற்கு எதிரே தென்னைமரங்கள் சூழ இயற்கை எழிலிலும் தெய்வப் பொலிவும் மிளிர ஸ்ரீ அமிர்தலிங்கசுவாமி மடாலயம் அமையப் பெற்றுள்ளது. மடாலயத்திற்கு தென்புறம் மகாவில்வ கணபதி மகாவில்வ மரத்தடியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இக்கடவுளை வணங்கிய பின்னரே ஆலயத்துள் நுழைய வேண்டும். இடதுபுறத்தில் சுவாமியார் தங்கும் அறையும் மற்றும் அன்னதான கூழ்காய்ச்சும் அறைகளும் உள்ளன.

முன்புறம் பலவகை பூச்செடிகள் வளர்க்கப்பட்டு நந்தவனமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நந்தியாவட்டம், அடுக்கு நந்தியாவட்டம், செவ்வலரி, சுவர்ணபட்டி போன்ற கடவுளுக்கே உகந்த தெய்வீகத் திருமலர்கள் இங்கு உள்ளன. இவைகள் மாலைகளாகத் தொடுக்கப் பெற்றும் மற்றும் உதிரியாகவும் இறைமேனியை அலங்கரிக்கின்றன.

சித்தர் வருகை

சாதுசாமி மீண்டும் மலைக்குச் சென்று பலநாள் இரவு பகலாய் அங்கேயே தங்கி தவம் செய்வதும், பசியெடுத்தபோது கீழிறங்கி வந்து உணவெடுப்பதுமாக காலம் கடத்தி வந்தார். இவ்வாறு இவருக்கு அன்னமிட்டு ஆதரித்தோர் இல்லங்களில் அன்னம் பெருக கண்டு, அவர் கீழே இறங்கிவரும் நேரத்தை யாவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர், அவர் அருள் பெறுவதற்கு! இங்கு வேலூரில் கசத்துமேடு என்ற பகுதியில் குளமொன்று இருந்தது. அந்த குளம் பெரும்பாலும் சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்ததால் அதற்கு வண்ணான்குளம் என்ற பெயரும் இருந்தது. இந்த குளத்தின் கரை பழங்கால கருங்கற்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. குளத்தை சுற்றி தோட்டங்களும், தோப்புகளும் இருந்தன. மேலும் இப்பகுதி வயல்பகுதிகளாகவும் இருந்தன.

குளத்தின் ஒரு ஓரத்தில் மரத்தடி ஒன்றில் அமர்ந்து தவம் செய்து வந்தார். அப்போதும் அங்கு வந்து விளையாடும் சிறுவர்களுடன் தானும் விளையாடுவார். இவ்வாறு காலம் செல்லுகையில் ஒருநாள் தான் பரம்பொருளுடன் ஒன்றாகும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார். அங்கு வழக்கமாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கூப்பிட்டு கீழே கிடந்த மணலை அள்ளி பொறியாக்கி அவர்களுக்கு தின்னக்கொடுத்தார். சிறுபிள்ளைகளை நோக்கி அங்கிருந்த ஒரு வண்ணான் சாலை காட்ட அதனருகில் தான் உட்காரப்போவதாகக் கூறி, உட்கார்ந்ததும் அந்த சாலை அவர்மீது கவிழ்த்து விடுமாறும் கேட்டுக் கொண்டார். அவ்வாறே சாமியார் அமர, சாலை அவர் மீது கவிழ்த்தனர். பின் சிறிது நேரம் கழித்து திறந்து பார்க்க சாமியாரைக் காணவில்லை. திகைத்து நின்ற சிறுவர்கள் அழ ஆரம்பித்துவிட்டனர். அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வந்து, விஷயத்தை அச்சிறுவர்கள் சொல்லக் கேட்டு, மீண்டும் சாலை சாமி முன்பு அமர்ந்த இடத்தில் மூடியை திறந்து பார்க்க சாமியார் இருக்கக் கண்டு அதிசயித்தனர். இதற்குள் மறைந்து விட்டதாக செய்தியறிந்த மக்கள் கூடிவிட்டனர்.

அங்கிருந்தவர்களை பார்த்து, "நான் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டேன். எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருக்கிறது. என்பெயர் அமிர்தலிங்கம்; என்னை புண்ணாக்குசாமி என்று அழைப்பதை விடுத்து இனி, அமிர்தலிங்க சுவாமி என்ற பெயரில் வழங்கவும் நான் இவ்விடத்தில் உள்ளேன். ஆனால் என்னை யாரும் பார்க்க முடியாது!" என்று கூறி மீண்டும் சாலை மூடச் சொல்ல, அவ்வாறே அங்கிருந்தவர்கள் மூடி, மீண்டும் திறந்து பார்க்க சாது அங்கில்லாதது கண்டு, சுவாமி சமாதி ஆகிவிட்டார் என்று பலரும் அவ்விடத்தை வலம் வந்து தரிசிக்கலானார்கள்.

மடம் உருவானது

சாது மறைந்த இடத்தில் விளக்கேற்றுதல், மலர்கள், மாலைகள் சாத்துதல், தூப தீப ஆராதனை செய்தல் போன்ற வழிபாடுகள் தொடர்ந்தன. இது இவ்வாறு நடந்துவர இங்கிருந்த பெரியோர்கள் சிலர் இவ்விடத்தில் சாது சித்தர் பெயரில் ஆலயம் ஒன்று எழுப்ப மனங்கொண்டனர். சாது சமாதி ஆன இடத்திலேயே ஆலயம் கட்ட சிந்தித்திருந்தவேளை, அவ்விடத்தை வாங்கியிருந்தவரும் ஆலயம் கட்ட தானம் செய்துவிட்டார். இடம் கிடைத்த பின்னும் சுவர், மண்டபம் ஆகிய கட்டுவதற்கு முன்பு சொல்லப்பட்ட வண்ணான்குளத்தில் கரைகளில் இருந்த கருங்கற்களை எடுத்துக்கொள்வது என ஊர்ப் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. ஆலயத்தை கட்டி முடித்ததும் அதற்கு பூசை முதலியவற்றிற்கு இரங்கூன் இராமசாமி முதலியார் என்னும் வள்ளல் ஒரு பெரிய திருமண மண்டபத்தை ஆலயத்திற்கெதிரே கட்டி அதனை தானமாக அளித்தார். மற்றும் ஒரு பெரியவர் வேலூர் சந்நதி தெருவில் நெ.15/1 மற்றும் 15/2ல் உள்ள வீடுகளை அளித்து ஒன்றில் வரும் வருமானம் பூசை முதலியவற்றிற்கும் மற்றொன்றில் வரும் வருமானம் தினசரி சாமியார்களுக்கு மதிய உணவளிக்கவும் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் இராணிப்பேட்டை காரை கிராமத்தில் சுமார் 5.7 ஏக்கர் நஞ்சை நிலம் மடத்திற்கு பலர் தானம் வழங்கியுள்ளனர்.

இவ்வாறாக ஊரார் பெருமுயற்சியில் திருவாலயம் எழுந்தபின் குமாரசாமி சுவாமிகள் என்பவரைக் கொண்டு பூசணை முதலியன துவங்கப் பெற்றதாக அறியக்கிடக்கின்றது. அவருக்கு பிறகும் 2, 3 சாமியார்கள் இதனை நிர்வகித்து வந்தனர். அதன்பிறகு மாணிக்க சுவாமிகள் என்பவர் இப்பேராயத்தின் பொறுப்பேற்றார். இவர் காலத்தில் இங்கே நல்ல பல செயல்கள் நடந்துள்ளன. இதனை சாமியார்கள் நடத்தி வந்தாலும் சாது சித்தர் அமிர்தலிங்கசுவாமி அடக்கமாகியுள்ள தலமாதலாலும் சாமியார் மடம் என்று பெயர் வைக்க சிலர் முன் வந்தனர். ஆலயம் (கோயில்) என்றே இருக்கவேண்டுமென்றனர் சிலர். ஆலயத்தில் மூலவர் சிவலிங்கம் ஆக உள்ளதாலும் பொதுமக்கள் வழிபாடு செய்வதாலும் மற்றும் சாதுக்களின் பாசறையாக உள்ளதாலும் இதனை மடாலயம் (மடம் + ஆலயம் = மடாலயம்; மடம், ஆலயம் இரண்டும் சேர்ந்த ஒரு அமைப்பு) என்று இம்மாணிக்க சுவாமிகளே இருவர்க்கும் பொதுவாக மாற்றியதாக கூறப்படுகிறது.

இவர் காலத்தில் மடம் மிகவும் வளர்ச்சியுற்று நல்ல நிலையில் இருந்தது. மடத்தின் அப்போதைய நிர்வாகச் சிறப்புகள் : 1. யோகப் பயிற்சி, 2. யோகாசனப் பயிற்சி, 3. தியானப் பயிற்சி, 4. மதியம் குறைந்தது ஒரு சாதுக்காவது அன்னம் வழங்க ஏற்பாடு செய்தல். 5. சந்நியாசிகள் தங்கும் வசதி/இடம் ஏற்பாடு செய்தல். 6. சைவ சித்தாந்த வியாபகம் செய்தல். 7. பொதுமக்களுக்கு வைத்திய தொண்டு செய்தல். அதன்பிறகு சுந்தரராச சுவாமிகள், கணபதி சுவாமிகள் ஆகியோர் மடத்தை நிர்வாகம் செய்து வந்தனர். கணபதி சுவாமிகள் காலத்தில் யோகம், வைத்தியம் முதலானவை தலைசிறந்து விளங்கின.  தற்போதைய புதிய நிர்வாகியின் முயற்சியால் இவை சிறிது சிறிதாக மறைந்துவிட்டன.

நவவில்வ தாரு

ஒரே இலைக்காம்பில் ஒன்பது பிரிவுகளாகக் கொண்ட இலைத் தொகுதியுடைய நவவில்வமரம் இம்மாடலய தோட்டத்தில் உள்ளது. இது மகாவில்வமாகும். இதன் காய் அல்லது கனி ஒரு மிளகு பெரிது இருக்கும். இது மகாவில்வத்தின் மற்றொரு அடையாளம் ஆகும்.

இம்மகா வில்வத்தை சாமியார் ஒருவர் கொண்டுவந்து நட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நவ இலையிதழ் கொண்ட வில்வத்தை வேறெங்கும் காண்பது அரிதாகும். இமயம், நேபாளம், கேரளம், இலங்கை போன்ற இடங்களில் உள்ளதாக சொல்கின்றனர்.

இம்மகா வில்வம் பெருமையும், பவித்தரமும் கொண்டதாகும். திருமடத்தின் தென்கீழ் திசையிலுள்ள இம்மரத்தினடியில் மகா வில்வ கணபதி அருள்பாலிக்கிறார். இவரை வணங்கிய பின்பே மடாலயத்திற்குள் சென்று ஸ்ரீ அமிர்தலிங்க சுவாமியை வணங்க வேண்டும். பொதுவாக வில்வம் சிவபெருமானுக்கு உகந்தது, நவவில்வம் மேலும் சர்வேசுவரனை நனி சிறப்பு செய்யும் தன்மையுடையது. காரணம் நவயிதழ்யிலை தொகுதியுடைய இம்மகாவில்வம் நவசக்திகள் வாசஞ் செய்யும் தெய்வத் தருவாக கருதப்படுகிறது. மேலும், இரவானதும் இம்மரத்தை பக்தர்கள் சுற்றுவதில்லை காரணம் கேட்டபோது, இரவில் இம்மகாவில்வத்தை தேவர்கள் வந்து வழிபடுவதாகவும், அந்த வேளையில் மரத்தைச் சுற்றிவருவதால் தேவர்களின் வழிபாட்டிற்கு இடையூறு உண்டாகுமென்றும் கூறுகின்றனர். இவ்வில்வத்தை கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. வில்வத்தில் ஈசுவரன் முழுமையாக நிறைந்துள்ளார். இம்மகாவில்வத்தின் மகத்துவத்தாலன்றோ தீயசக்திகளின் அழிவிற்காட்படாமல் மடாலயம் இன்றும் நிலைத்துள்ளது!

திருவிழாக்களும் பொதுமக்கள் ஈடுபாடும்

சமீபகாலமாக மடாலயத்தில் பொதுமக்கள் ஈடுபாடு நாளுக்குநாள் அதிகரித்து வரலாயின. ஆன்மீகச் சிந்தனையும், சேவை மனப்பான்மையும் கொண்டுள்ள சான்றோர்கள் பல்லாற்றாலும் சிவத்தொண்டும், சித்தாந்த கொள்கைகளை பரப்புதலும் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை வேளையில் திருவருட்பாவிலிருந்து சமயப்பிரச்சாரம் அறிவார்ந்த சான்றோர்களால் செய்யப்படுகிறது. தினந்தோறும் காலை வேளையில் கஞ்சி வார்க்கும் அன்பர் குழுவால் வள்ளலார் நினைவாக ஏழைகளுக்கு இம்மடாலயத்தில் அன்னதானம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு செவிக்கும், வயிற்றுக்கும் உணவளிக்கும் நிலை உருவாகி, இவ்வூரில் சரிந்துள்ள இந்து மதத்தை மீண்டும் தலைதூக்கச் செய்து வரும் வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் போன்று இம்மடாலயம் இறைத்தொடர்புள் பல அரிய சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் பௌர்ணமி அன்று இம்மடாலய மூலமூர்த்தியாக விளங்கும் குருமூர்த்தி ஸ்ரீ அமிர்தலிங்க சித்தருக்கு குருபூசை தனிசிறப்புடன் செய்யப்படுகிறது. பொதுமக்களும் பக்தர்களும், இளைஞர்களும் குறிப்பாக பெண்களும் பேரளவில் கலந்துகொண்டு, தாங்கள், தங்களாலான நிதி உதவியும் உழைப்பினையும் நல்கி வருகின்றனர். இத்திரு பூஜையின்போது வெளியூர்களில் இருந்து சாதுக்கள் வரவழைக்கப்படுகின்றனர். அன்னதானத்துடன் வஸ்திரதானமும் சாதுக்களுக்கு வழங்கப்படுகிறது. அன்று ஏழைகளும் முதியோர்களும் பெருமளவில் உணவுண்டு உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று மடாலய நிர்வாகத்தினரையும் இப்புனித சேவையில் ஈடுபட்டு வரும் சான்றோர்களையும் பாராட்டி வருகின்றனர்.
 
இங்கு குருபூசை தொடர்ந்து சுமார் 230 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. எது தபைட்டாலும் சித்தர் அருளால் குருபூசை தடைபடாமல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு அதாவது விக்ரம வருடம் சித்திரைத்திருநாள் திருமடாலயத்திற்கு எவ்வித செலவுமின்றி ஊர்ப்பொதுமக்களே இதில் பெரிதும் ஈடுபட்டு செய்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. விநாயகப் பெருமானுக்குகந்த சதுர்த்தி, குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி மாதந்தவறாமல் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதுபோல் சிவபெருமானுக்குகந்த பிரதோஷமும் பக்திச் சிரத்தையுடன் செய்யப்பட்டு வருகின்றன. எல்லாம் உபயதாரர்களாலேயே செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கார்த்திகை திங்களில் கார்த்திகை தீபத் திருவிழா இம்மடாலயத்தில் பெரிதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐப்பசித் திங்கள் வரும் பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் கழிபெருஞ்சிறப்புடன் கோலாகலத்துனம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் ஜெயந்தி விழா அழைப்பிதழ்

அன்புடையீர், வணக்கம் நிகழும் ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் 25&ம் நாள் (11.11.2017) சனிக்கிழமை தேய்பிறை, பைரவர் ஜென்மாஷ்டமி ஆயில்யம் நட்சத்திரம், கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஜெயந்தி விழா நடைபெறுவதால் தாங்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவர் அருள்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்: 11.11.2017 சனிக்கிழமை காலை 5 மணிக்கு, கணபதி பூஜை, புன்னியாவஜனம், கோபூஜை, நவகலச பூஜை பைரவர் மஹா ஹோமம் நடைபெறும். பகல் 11 மணிக்கு : பூர்ணாஹூதி, மற்றும் கலச அபிஷேகம் மஹா தீபாராதனை நடைபெறும். அதைத்தொடர்ந்து பிரசாதம், கலச தீர்த்தம் வழங்குதல். மாலை 5 மணிக்கு : ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்க்கு சந்தனகாப்பு அலங்காரம் பைரவர் சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மஹா தீபாராதணையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு : அன்னதானம் நடைபெறும்.
தொடர்புக்கு :  விஸ்வனாத் : 9443490271 / 9843074748.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து