ஈரோட்டில் மஞ்சள் விலை ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 1,400-க்கு மேல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      புதுச்சேரி

இந்தியாவில் தெலங்கானா மாநிலம், நிஜமதாபாத், வாரங்கல், மகாராஷ்டிராவின் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு ஆகிய இடங்கள் மஞ்சள் வர்த்தகத்துக்குப் புகழ்பெற்றவை. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறையில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், செம்மாம்பாளையம் மஞ்சள் வணிக வளாகம், ஈரோடு, கோபி கூட்டுறவு மஞ்சள் விற்பனைச் சங்கங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இங்கு மஞ்சளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். இங்கு, மஞ்சள் மாதிரியின் தரம் பார்த்து விலை நிர்ணயம் செய்யப்படுவதோடு, அதிக விலை கோரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படும். 2010-ஆம் ஆண்டு மஞ்சள் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து தங்கத்துக்கு நிகராக குவிண்டால் ரூ. 18 ஆயிரத்துக்கு விற்பனையானது.

விற்பனை  ஆர்வம்

இதையடுத்து, படிப்படியாகக் குறைந்து குவிண்டால் ரூ. 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. தொடர்ந்து, ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ. 8 ஆயிரத்துக்கு விலைபோனது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் இருப்பு வைத்திருந்த  மஞ்சளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ. 8,150-க்கும், கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக ரூ. 7,977-க்கும் விலைபோனது. வெளிச்சந்தையில் விரலி அதிகபட்சமாக ரூ. 8,489-க்கும், கிழங்கு அதிகபட்சமாக ரூ. 7,674-க்கும் விலைபோனது. ஈரோடு சந்தையில் விரலி அதிகபட்சமாக ரூ. 8,659-க்கும், கிழங்கு அதிகபட்சமாக ரூ. 7,889-க்கும் விலைபோனது. கோபியில் மஞ்சள் அதிகபட்சமாக ரூ. 8,689-க்கும், கிழங்கு அதிகபட்சமாக ரூ. 7,913-க்கும் விலைபோனது.

8,589-க்கும் விற்பனை

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு அனைத்து ஏலக் கூடங்களுக்கும் மஞ்சள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. சனிக்கிழமையன்று ஒரே நாளில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ. 1,439 அதிகரித்து ரூ. 9,589-க்கும், கிழங்கு மஞ்சள்  ரூ. 612 அதிகரித்து ரூ. 8,589-க்கும் விற்பனையானது. இதேபோல், ஈரோடு - கோபி சொஸைட்டிகளிலும், வெளி மார்க்கெட்களிலும் மஞ்சள் விலை சனிக்கிழமை சற்று அதிகரித்தே விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த விலையேற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு, மஞ்சள் விலை ஏறலாம் எனக் கருதும் விவசாயிகள் இருப்பு வைக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து