அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி கொலை தொடர்பான மேலும் 680 கோப்புகள் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      உலகம்
Kennady-N

நியூயார்க் - அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி படுகொலை தொடர்பான ரகசிய தகவல் அடங்கிய மேலும் 680 கோப்புகளை அந்நாட்டு தேசிய ஆவணக் காப்பகம் இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.

அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவின்படி, கென்னடி படுகொலை தொடர்பான 3,810 கோப்புகளை கடந்த ஜூலை 24-ம் தேதியும் 2,891 கோப்புகளை கடந்த அக்டோபர் 26-ம் தேதியும் தேசிய ஆவண காப்பகம் இணையத்தில் வெளியிட்டது.

அதேநேரம் நாட்டின் பாதுகாப்பு கருதி, பாதுகாப்புத் துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில், மேலும் சில ரகசிய கோப்புகளை வெளியிடும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மீதமுள்ள கோப்புகள் அனைத்தையும் 2018 ஏப்ரல் 26-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று எப்பிஐ மற்றும் சிஐஏ-வுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில் கென்னடி படுகொலை தொடர்பான மேலும் 680 கோப்புகளை தேசிய ஆவண காப்பகம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இதில் மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சிஐஏ) இருந்த 553 மிகவும் ரகசியமான கோப்புகளும் அடங்கும். இவை இதுவரை எப்போதுமே பார்த்திராத கோப்புகள் ஆகும். வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றிய ரஷ்ய அதிகாரிகளை பணியமர்த்த முயற்சி செய்தது உள்ளிட்ட முக்கிய கோப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இது தவிர நீதித் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் கென்னடி படுகொலை குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்ற குழு அளித்த கோப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 1961 ஜனவரியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜான் எப் கென்னடி, 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக லீ ஹார்வி ஆஸ்வால்டு என்பவர் கைது செய்யப்பட்டார்.

எனினும் அடுத்த 2 நாட்களில் ஜாக் ரூபி என்பவரால் ஆஸ்வால்டு சுட்டுக் கொல்லப்பட்டார். கென்னடி படுகொலையில் இவர் மட்டும்தான் குற்றவாளி என அந்நாட்டு புலனாய்வு அமைப்பும் (எப்பிஐ) வாரன் ஆணையமும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தன. எனினும், கென்னடி படுகொலையில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருதினர். இதையடுத்து கென்னடியை சுட்டுக் கொன்றது யார் என்பது குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வந்தன.
இதனிடையே, கென்னடி படுகொலை தொடர்பான அனைத்து கோப்புகளையும் 25 ஆண்டுகளில் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றம் 1992-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து