அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      உலகம்
CHURCHSHOOTINGTEXAS 2017 11 06

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுமி உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.  இச்சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

நேற்றுமுன்தினம்  டெக்சாஸ் மாகாணத்தில் வில்சன் கவுன்டியில் சதர்லேண்ட் ஸ்ப்ரிங்க்ஸ் எனுமிடத்தில் உள்ள ஃப்ர்ஸ்ட் பேப்டிஸ்ட் சர்ச்சில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், போலீஸ்காரர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டாரா இல்லை தன்னைத்தானே அவர் சுட்டுக் கொண்டாரா என்ற தகவல் வெளியாகவில்லை.
பாதிரியாரின் மகளும் சுட்டுக் கொலை.


பேப்டிஸ்ட் தேவாலயங்களின் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கம். சம்பவம் நடைபெற்ற ஃப்ர்ஸ்ட் பேப்டிஸ்ட் தேவாலயத்தின் தலைமைப் பாதிரியார் பிராங் போமெரோய். இவரது இளைய மகள் அனபெல். சம்பவம் நடந்தபோது பாதிரியார் தேவாலயத்தில் இல்லை. ஆனால், அவரது இளைய மகள் அனபெல் இருந்துள்ளார். இதனால், துப்பாக்கிச் சூட்டில் அனபெல் இறக்க நேர்ந்தது.

துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் சான் அன்டோனியோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதிபர் இரங்கல்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இரண்டு வாரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்த தகவல் அறிந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெக்சாஸின் சதர்லாண்ட் ஸ்ப்ரிங்ஸ் மக்களுடன் இறைவன் இருப்பாராக. சம்பவ இடத்தில் சட்ட அமலாக்கப் பிரிவினரும், எஃப்பிஐ அதிகாரிகளும் உள்ளனர். ஜப்பானில் இருந்தபடியே நிலவரத்தை நான் கண்காணித்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபாட் இச்சம்பவத்தை கொடும் சம்பவம் என கண்டித்துள்ளார். அவருது அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டன செய்தியை பதிவு செய்துள்ளார். "இந்த கொடுஞ் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். சட்ட அமலாக்கப்பிரிவினருக்கு எனது நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து