விராட் கோலி மேலும் சதங்கள் அடிக்க டெண்டுல்கர் வாழ்த்து

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      விளையாட்டு
virat-kohli-sachin-tendulkar 2017 11 6

புதுடெல்லி : உலகின் எந்த அணியையும் வீழ்த்த கூடிய அணிக்கு கேப்டனாக இருக்கும் விராட் கோலி, மேலும் சதங்கள் அடிக்க வேண்டுமென்று கோலி பிறந்த நாளில் சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்பவர் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் என 3 நிலைகளுக்கும் கேப்டனாக இருந்து இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். விராட் கோலி தனது 29-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். ராஜ்கோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வீரர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய கேக்கை வெட்டி அவர் பிறந்த நாளை கொண்டாடினார். நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை கவலைப்படாமல் விராட் கோலி உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். விராட் கோலிக்கு சக வீரர்கள், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் முன்னாள் வீரர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட்டில் சகாப்தமான டெண்டுல்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தி வருமாறு:-


விராட் கோலி எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய இளம் வீரர் ஆவார். உலகின் எந்த அணியையும் வீழ்த்த கூடிய அணிக்கு கேப்டனாக இருக்கிறார். அவர் மேலும் சதங்களை வெற்றிகரமாக அடித்தும், நீண்டநாள் வாழவும் வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, விராட் கோலிக்கு பிறந்த  நாள் வாழ்த்துக்கள். அவருக்கு வரும் ஆண்டுகளும் புகழ் பெற்றதாக இருக்க வேண்டும் என்றார்.

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மேத்யூஸ் கூறும்போது, விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் சகாப்தம் ஆவார். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராவார். அவருக்கு இந்த ஆண்டு மிகவும் சிறந்ததாக இருந்தது. விராட் கோலிக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்றார். இதேபோல ரெய்னா, ரோகித் சர்மா, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரும் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) விராட் கோலிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து