அடுத்த மாதம் சனிப்பெயர்ச்சி: நல்லவர்களுக்கு நல்லதையே செய்வார்: சனிபகவான் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள்

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      ஆன்மிகம்
Anmigam

Source: provided

தமிழ்நாட்டில் திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, பவானி கொடுமுடி, தேனி குச்சனூர், மதுரை திருவாதவூர், திருவாரூர் திருநெல்லிக்காவல், காஞ்சிபுரம் குரங்கணில் முட்டம், புதுக்கோட்டை திருப்புனவாசல், மயிலாடுதுறை இடும்பாவனம், பூந்தமல்லி, ஸ்ரீவாஞ்சியம், திருப்பைஞ்சீலி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் சனிபகவான் தனி சன்னிதியாக அமைந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

அந்த ஊர்களில் உள்ள சனிபகவானின் சன்னிதியின் தனி வரலாறை தெளிவாக பார்க்கலாம்...!

அவரவர் ஜாதக அமைப்பின்படி இன்பதுன்பங்களை வழங்க ஏற்பட்ட கிரகம் சனி என்பர். ஆயுள், உடல் நலம் காப்பதோடு, ஏற்றமும், இறக்கமும் செய்ய வல்லவர். நவக்கிரகங்களில் உறுதியான கிரகம் சனி ஒருவரே.

நன்மைகளை வாரி வழங்குவதில் தாராள இயல்புடையவர் என்றும், அது போன்றே ஜாதகத்தில் தீமையான பலன்களை வழங்க வேண்டிய நிலையில் அமையப் பெற்றிருந்தால், தீமையளிப்பதிலும் தயக்கம் காட்டாதவர். ஒரு  சுற்று முடிய முப்பது ஆண்டுகள். அதாவது ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

சந்திரன் உள்ள ராசியை ஜன்ம ராசி என்பர். ஜாதகத்தில் சந்திரன் உள்ள ராசியைக் கொண்டே கோசாரப் பலன்கள் கூறப்படுகின்றன. சந்திரனுக்கு பின்னுள்ள ராசி, சந்திரன் உள்ள ராசி மற்றும் அதற்கடுத்துள்ள ராசி என மூன்று ராசிகளிலும் கோசாரப்படி சனி சஞ்சரிக்கும் காலமே ஏழரைச்சனியின் காலம் என்பர்.

சந்திரன் நின்ற ராசிக்கு நான்காவது ராசியில் சனி உலவிடும் காலம் அர்த்தாஷ்டம் சனி அல்லது கண்டச் சனி என்பர். சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் காலம் அஷ்டமத்துச் சனி என்பார்கள்.

சனி அசுப கிரகங்களில் ஒன்று. ஆணும் பெண்ணுமற்ற அலிக்கிரகம். எனினும் சேரும் கிரகத்தைப் பொருத்து ஆண்கிரகமாகவும் மாறும். வாயு தத்துவக் கிரகம். மனித உடலில் சிறு நீர்ப்பை, எலும்புகள், பற்கள், மண்ணீரல், காது ஆகியவற்றையும் குறிப்பிடும் காரத்துவமுள்ளவர்.

சிறுநீரகக் கோளாறு, பாதநோய், காக்கை வலிப்பு, குஷ்டம் ஆகியவற்றையும் வலிமை குன்றிய அல்லது குஸ்தான ஆதியத்தியம் பெற்ற கனியினால் ஏற்படும். இவற்றை தவிர்க்க நாம் வழிபட வேண்டிய சனி கிரக அம்சம் உடைய தலங்கள் வருமாறு:

1. திருநள்ளாறு

சனீஸ்வர பகவானின் தலமாகிய திருநள்ளாறு காரைக்காலில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இத்தலத்து இறைவனின் பெயர் தர்பாரண்யேசுவரர் தர்ப்பைக் காட்டில் இருந்து, தர்ப்பைப் புல்லில் இருந்து தோன்றியவர், இன்றும் இந்த லிங்கத்தின் மீது தர்ப்பைப் புல்லின் வடு உள்ளது.

திருநள்ளாறு சனீஸ்வர பகவானை ஐப்பசி மாதம், ஆட்சி பெறும் தை, மாசி மாதங்களில் வழிபடலாம். மேலும் சனீஸ்வர பகவானின் நட்சத்திரங்கள் ஆகிய  பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் சனிக்கிழமைகளில் சனி ஓரையில் வழிபட்டு, பரிகாரம் செய்தால் மிகச் சிறந்த பலன்கள் உண்டாகும்.

திருநள்ளாறு என்றாலே அங்கு சனீஸ்வர பகவானுக்கு தனிக்கோவில் இருக்கிறது என்று மட்டும் தான் நிறைய பேர் அறிந்திருப்பார்கள். ஆனால் அந்தத் தலத்தில் உள்ள மற்ற மூர்த்திகளின் பெருமைகளை அறிந்தவர்கள் சிலர் தான். ஒரு காலத்தில் இவ்வூர் தர்ப்பை புல் நிறைந்த வனமாக இருந்திருக்கிறது. வுனம் என்பதை ஆரண்யம் என்றும் சொல்வது உண்டு. அந்த தர்ப்பாரண்யத்தில் சுயம்பு உருவாக தோன்றிய ஈஸ்வரனின் பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர்.
 
பின்னர் தர்ப்பாரண்யேஸ்வரர் கோபுரவாசலில் மறைந்திருந்த சனி பகவானை அழைத்து தனது பட்டமாகிய ஈஸ்வர பட்டத்தை அளித்து இத்தலத்திலேயே இருந்து இங்கு வரும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யுமாறு ஆணையிட அவ்வாறே இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வரபகவான் இருப்பதாக ஐதீகம். சனி பகவானாக இத்தலம் வந்த இவர் ஈஸ்வரன் பட்டம் பெற்று சனீஸ்வர பகவான் ஆகியதாக சொல்லப்படுகிறது.

திருநள்ளாறு செல்லும் முன் வழிபட வேண்டிய திருத்தலங்கள்

விருத்தாசலம் : நள மகராஜன், சனீஸ்வர பகவானின் வேகம் தணிய, நாரதர் உபதேசப்படி தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது விருத்தாசலத்தில் நளமகராஜன் இறைவனை வழிபட்டபோது அங்கு அவர் சந்தித்த பரதவாஜ முனிவர் திருநள்ளாறு சென்றால் நன்மை கிடைக்கும் எனக் கூறி அருளியதால், நாமும் விருத்தாசலம் சென்று ஆலயம் தொழுது பிறகு திருநள்ளாறு செல்வது சிறந்த பரிகாரமாக அமையும்.

திரும்புகலூர் : இத்திருத்தலம் நாகப்பட்டினத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ளது. நளச் சக்கரவர்த்தி சனி தோஷம் நீங்க தீர்த்த யாத்திரை செய்யத் தீர்மானித்து வந்து இந்தத் திருத்தலமே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சனி பகவானின் அனுக்கிரகம் கிடைத்து, பின்னர் திருநள்ளாற்றில் விடுதலை ஆயிற்று. எனவே இத்திருத்தலத்தையும் வழிபட்ட பிறகு திருநள்ளாறு செல்வது சிறந்த பரிகாரமாக அமையும்.

திருநாகேஸ்வரம் : கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ள இந்த ராகு தலத்தில்தான் நள மகராஜன், தனது இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். எனவே இத்திருத்தலத்தையும் வழிபட்டு திருநள்ளாறு செல்வது மிகவும் சிறந்த பரிகாரமாக அமையும்.

2. திருகொள்ளிக்காடு

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாகச் சனீஸ்வரரின் அருள் பெற்ற ஒரே திருத்தலம் இந்த திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலமே ஆகும். திருத்துறைப் பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில், நால்ரோட்டில் இறங்கி மேற்கே செல்லும் ஆலத்தூர், விக்ரவாண்டியம் பாதையில் உள்ளது.

இது அக்னி பகவான் வழிபட்ட தலமாகும். மேற்கு திசையைப் பார்த்த சந்நிதி, வில்லேந்திய முருகர். இத்தலத்தில் சனி பகவான் வாயுதிக்கில் மகாலட்சுமி ஸ்தானத்தில் இருந்து, பொங்கு சனியாக அருள் தருகிறார்.
பொங்குசனி நடப்பவர்கள் அவசியம் தரிசித்தே ஆக வேண்டும்.

3. பவானி – கொடுமுடி

ஈரோட்டில் இருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்திலும், ஈரோட்டில் இருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும், சனி பகவானுக்கு தனி சந்நிதிகள் உள்ளன.
இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.

4. குச்சனூர்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் ஒன்றரை கி.மீ. தூரத்தில் குச்சனூர் திருத்தலம் உள்ளது. இத்திருத்தலத்தில் சனீஸ்வரபகவான் லிங்க வடிவில் சுயம்புவாகத் தோன்றியுள்ளார். இத்திருத்தலத்தின் மூலவர் இவரே. இந்தியாவிலேயே சனீஸ்வர பகவானுக்கான தனிக் கோவில் இதுதான். இத்தலம் பெரியாறும், சுரளியாறும் சங்கமித்து வரும் முல்லையாறு கரையில் உள்ளது.

எள்ளை விடச் சிறிய இலையையும், பூவையும் கொண்ட தலமரமாகிய விடத்தலை மரம். இந்த மரத்தின் கீழ் இறைவனைத் தியானித்த வண்ணம் சனி பகவான் காட்சி தருகிறார். சனீஸ்வரர் தமது மனைவி நீலாதேவியுடன் காட்சி தரும் உத்சவ விக்ரஹம இத்திருத்தலத்தில் உள்ளது. சனீஸ்வரர் சூரிய வம்சத்தில் பிறந்தவர் என்பதால் மூல ஸ்தான விக்ரஹத்திற்கு வைஷ்ணவ நெற்றிக்குறியான நாமம் இடுகிறார்கள்.

5. திருவாதவூர்

மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. இது சனீஸ்வர பகவான் வழிபட்ட திருத்தலமாகும். சனீஸ்வரருக்குத் தனி சன்னிதி உள்ளது. மாண்டவ்ய முனிவரைச் சனீஸ்வரர் பற்ற, அதனால் கோபமுற்ற முனிவர், சனீஸ்வரரை முடமாகப் போகச் சாபமிட்டார். இந்த சாபம் நீங்கவே சுயம்புவாகத் தோன்றி, இத்திருத்தலத்தில் காட்சி தரும் இறைவன் வேதபுரீஸ்வரர், அம்பாள் வேதநாயகி ஆகியோரை வழிபட்டு சனீஸ்வர பகவான் தன் வாதத்தைப் போக்கி கொண்டார்.

சனியின் வாத நோய் குணமானதால்தான் இந்த ஊருக்குத் திருவாதவூர் எனப் பெயர் வந்தது. எனவே சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சனிபகவான் அருள்பெற்ற இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டால் சனீஸ்வர பகவானின் அருளைப் பெற முடியும்.

திருநெல்லிக்காவல் : இத்தலத்திற்கு திருத்துறைப் பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு என்ற இடத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். இத்தலம் பல சிறப்புகள் உடைய ஒரு அற்புதமான திருத்தலமாகும். சனி பகவானே இறைவனை வழிபட்ட பெருமை மிக்க திருத்தலம் இத்திருத்தலம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் சனிதோஷம் நீங்கி, சனி பகவானின் அருள் கிட்டும்.

குரங்கணில் முட்டம் : இத்திருத்தலம் காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் பாதையில், பாலாற்றைத் தாண்டி, தூசி என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து செல்ல வேண்டும். சனி பகவானின்  அதிதேவதையான எமன், காகம் வடிவில் வழிபட்ட தலம் இது.

திருப்புனவாசல் : அறந்தாங்கியிலிருந்து இத்திருத்தலத்தை அடையலாம். சுனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட தலம்.

மயிலாடுதுறை : இங்குள்ள அருள்மிகு மயூரநாத சுவாமி திருக்கோவிலில் எமன் வழிபட்ட லிங்கம் உள்ளது.

இடும்பாவனம் : இத்திருத்தலம் முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது. சனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட திருத்தலம் இது.

அகஸ்தியம்பள்ளி : இத்திருத்தலம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் பாதையில் உள்ளது. அகத்தியர் வழிபட்ட திருத்தலம் இது. சனி பகவானின் அதிதேவதையான எமன் வழிபட்ட திருத்தலம்.

பூந்தமல்லி : சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் என்னும் திருத்தலத்தில் உள்ள சனீஸ்வர பகவான் மிகவும் விசேஷமானவர்.

சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.

ஸ்ரீவாஞ்சியம் : கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பஸ்சில் சென்று, குடவாசல், குடவாசல் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து குடவாசல், நன்னிலம் போகும் பஸ்சில் சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். இது காசிக்கு நிகரான திருத்தலமாகும். பல சிறப்புகளை உடைய திருத்தலம் இது. இங்கு எம பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. எம பகவான் ஈசனுக்காக வாகனமாக மாறிய உருவமும் உள்ளது.

இங்கு இறைவனையும் அம்பாளையும் வழிபாடு செய்து, குப்த கங்கை, எம தீர்த்தத்தில் நீராடி எமபகவானுக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வழிபட்டால் சனி பகவான் அருள் கிட்டி, சனிதோஷ பரிகார நிவர்த்தி ஏற்படும்.

திருப்பைஞ்சீலி : திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து டோல்கேட், மண்ணச்சநல்லூர் வழியாக 19 கி.மீ. தூரத்தில் உள்ளது. இத்திருத்தலம் பஸ் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் எமனுக்கு தனி சன்னிதி உள்ளது. சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு பரிகாரம் செய்ய சனி பகவான் அருள்பெறலாம்.

வருகிற டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனி பகவான் விருச்சக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு காலை 10.01க்கு மணிக்கு பிரவேசிக்கிறார். இதனால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிகளைச் சேர்ந்த வாசக அன்பர்கள் பரிகாரம் செய்து நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

A.A.A.மதன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து