எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு மலருக்காக அரிய புகைப்படங்கள் - தகவல்களை வழங்குங்கள்: அமைச்சர்கள் உதயகுமார் - கடம்பூர் ராஜ் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      தமிழகம்
Uthayakumar - Kadambur Raju 2017 11 07

சென்னை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் தயாரிப்பதற்காக அரிய புகைப்படங்கள் மற்றும் அவர் புரிந்த சாதனைகள் மற்றும் சிறப்பு தகவல்களை தெரிவிக்க வேண்டுமென அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை கலைவாணர் அரங்க கூட்டரங்கில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பான, விழா மலர் குழு கூட்டம் நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கடந்த ஜூன் 30-ம் தேதி மதுரை மாவட்டத்தில் தொடங்கி இதுவரை 21 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, சென்னையில் சிறப்பாக நடத்தப்படவுள்ளதையொட்டி எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்ச் சமுதாயத்திற்கு தெரிவித்த அரிய பலகருத்துக்களை சேகரித்தும், தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராக எம்.ஜி.ஆர் ஆற்றிய பல சாதனைகள் குறித்தும் விழா சிறப்பு மலர், குறும்படம் மற்றும் அரிய புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு தயாரித்து வெளியிடப்படவுள்ளது.
எனவே, திரைப்படத்துறையைச் சார்ந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ்,  உதயகுமார், நாஞ்சில் ப.க. அன்பழகன் மற்றும் விழா மலர்க்குழு உறுப்பினர்களையும் அன்னாரின் புகழை வெளிக்கொணரும் வகையில் வெளியிட தங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக வெளியிடவிருக்கும் சிறப்பு மலரில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துரைகளும், முக்கிய பிரமுகர்கள் எம்.ஜி.ஆரின் தனித்துவம் குறித்து வழங்கிய பிரத்யேக கட்டுரைகள், வெளியிட்ட சிறப்பு செய்திகள் மற்றும் பேட்டிகள் போன்ற தகவல்கள் அடங்கியிருத்தல் வேண்டும். இச்சிறப்பு மலர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய வேண்டி இந்த விழா மலர் குழுவில் அரசு அதிகாரிகள், திரைப்படத்தைச் சார்ந்தவர்கள் முக்கிய பிரமுகர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இக்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.ஆரை பற்றிய தனிச்சிறப்புகள், தமிழ்நாட்டிற்கு அவர் புரிந்த சாதனைகள், அவரைச் சார்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை இக்குழுவிற்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், எம்.ஜி.ஆரின் அரியபுகைப்படங்கள் ஏதேனும் இருப்பின் இக்குழுவிற்கு வழங்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள் எம்.ஜி.ஆர். ஆற்றிய சட்டமன்ற உரைகள் போன்ற செய்திகளோடும் இச்சிறப்பு மலர் அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செய்திமக்கள் தொடர்புத் துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்

முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் நூற்றாண்டு விழா தொடர்பாக வெளியிடவிருக்கும் சிறப்பு மலரில் அமையவுள்ள வாழ்த்துரைகள், கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் குறித்து அமைச்சர் பெருமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநர் ஜெயகாந்தன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்கள் அருள், விசயராகவன், திரைப்பட இயக்குநர்கள்  பாரதிராஜா, பாக்கிய ராஜ், உதயகுமார், நாஞ்சில் அன்பழகன், மருது அழகுராஜ், செய்தி-மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் ரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர். எஸ்.பி.எழிலழகன் நன்றி கூறினார்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து