கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து தற்காலிக பேருந்து நிலையங்கள்: ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      திருவண்ணாமலை
photo05

 

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி பக்தர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தற்காலிக பேருந்து நிலையங்களை பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 23ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

தற்காலிக பேருந்து

டிசம்பர் 2ந் தேதி விடிற்காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் பகுதியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் 9 சாலைகளில் உள்ள தற்காலிக பேருந்து நிலையங்களையும் பார்வையிட்டு வாகனங்கள் நிறுத்துமிடங்கள் கழிப்பிடம் மற்றும் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளையும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ரங்கராஜன் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் அசோக்பாபு, டி.பாலசுப்பிரமணியம், நகராட்சி ஆணையர் பாரிஜாதம், பொறியாளர் நீலேஸ்வரன், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பெ.புருஷோத்குமார், தனி அலுவலர் அ.கருணாகரன், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பி.பி.முருகன், தனி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) டி.கே.லட்சுமி நரசிம்மன், தாசில்தார் ஆர்.ரவி, வருவாய் ஆய்வாளர் பெ.மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து