தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு: தமிழறிஞர் நன்னன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      தமிழகம்
CM Edapadi2 2017 9 3

சென்னை : தமிழறிஞர் நன்னன் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முனைவர் பட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்குடல் எனும் ஊரில் 1924-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பிறந்தார் மா.நன்னன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்துள்ளார். வெள்ளையனே வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பேராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.


பொதுமக்கள் அஞ்சலி

மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியவர். எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் புதிய முறையை ஏற்படுத்திய பேராசிரியர் நன்னன், தொலைக்காட்சிகளில் தமிழ் தொடர்பான ஏராளமான நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளார். முதுமை காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த மா.நன்னன் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளன.

முதல்வர் இரங்கல்

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:-

சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளருமான மா.நன்னன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தனது தமிழ்ப் பணியைத் தொடங்கிய நன்னன், முனைவர் பட்டம் பெற்று, கலைக் கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார். நன்னன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக பணியாற்றியதோடு, எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையை உருவாக்கிய பெருமைக்குரியவர் ஆவார்.

பேரிழப்பு

நன்னன் ‘தவறின்றி தமிழ் எழுதுவோம்’, ‘எல்லார்க்கும்தமிழ்’ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தனது எழுத்துப்பணிக்காக பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு.வி.க. விருது போன்ற விருதுகளையும் நன்னன் பெற்றுள்ளார். தமிழ் மொழி மேல் நீங்கா பற்றுக் கொண்டவரும், அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய பண்பாளருமான நன்னனின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். நன்னனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கியத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனது திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.  இவ்வாறு முதல்வர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து