வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      தமிழகம்
rain 2017 10 12

சென்னை : அந்தமான் பகுதியில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 நாட்களாக மழை

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அந்த சமயத்தில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவானதால் தமிழக கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக மழை பெய்தபடி உள்ளது. இந்த நிலையில் வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டுக்கு அதிக மழை கிடைத்தது.


புதிய காற்றழுத்தம்...

குமரிக் கடல் முதல் தென் மேற்கு வங்கக் கடல் வரை பரவி இருந்த அந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னையில் 500-க்கும் மேற்பட்ட பகுதிகள் மிதக்கும் அளவுக்கு மழை பெய்தது. மேலும் அந்த குறைந்த காற்றழுத்தம் வலு இழந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் மழை பெற்றுத் தரும் வகையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறுகையில்.,

அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இந்த புதிய காற்றழுத்தம் இன்று முதல் வலுவடையத் தொடங்கும். இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். விட்டு, விட்டு மழை பெய்யும். சில சமயங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் அதிக மழை

புதிய காற்றழுத்தம் இன்றைய தினத்துக்குப் பிறகு மேலும் வலுவடையும் போது தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் அதிக மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் தலைஞாயிறில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது. திருத்துறைப்பூண்டியில் 7 செ.மீ., கோத்தகிரி, நீடாமங்கலம் 5 செ.மீ., பாபநாசம், நாகை, குன்னூரில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டை, தரமணி, பெரியார், திருவள்ளூர், குடவாசல், அம்பாசமுத்திரம், பொன்னேரி, சத்தியமங்கலம், குளித்தலையில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை தாம்பரத்தில் 2 செ.மீ. மழையும், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

கலெக்டர் ஆய்வு

சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை நீடித்தது. காலை 9 மணி முதல் 10 மணி வரை சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழை பெய்தது. பள்ளிக்கரணை அருகே உள்ள நாராயணபுரம் ஏரி சில தினங்களுக்கு முன்பே நிரம்பி உபரி தண்ணீர் வழிந்தோடியது. இதையடுத்து அந்த உபரி தண்ணீரை மழை நீர் கால்வாயில் வெட்டி விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, சிறப்பு அதிகாரி அமுதா ஆகியோர் அந்த பணியை பார்வையிட்டனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் நாரயாணபுரம் ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து