முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத்தினரை ஆட்சியில் அமர்த்த சவுதி மன்னர் சூழ்ச்சி: நட்சத்திர ஓட்டல் சிறையில் இளவரசர்கள்- அமைச்சர்கள்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

ரியாத் : சவுதி அரேபியாவின் ஊழல் புகாரில் கைதான 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தொழில் அதிபர்கள் உட்பட 38 பேர் ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஓட்டல்களில் சொகுசு கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை, அந்நாட்டின் ஆட்சிக்கட்டில் மீதான குடும்ப அரசியலால் நடத்தப்படும் மன்னர் சல்மான் பின் அப்துலஜீஸின் சூழ்ச்சி என சர்ச்சை கிளம்பியுள்ளது.

மன்னர் சல்மான் பின் அப்துலஜீஸ் அல் சவுதாலால் அமர்த்தப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையம் உருவான சில மணி நேரங்களில் அதிரடி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், சவுதி அரேபியாவின் 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பெருந்தொழில் அதிபர்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ’எம்பிஎஸ்’ என்றழைக்கப்படும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் (32) இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். கைது செய்யப்பட்டவர்களில் அரச குடும்பத்தின் அல்-வலீத் பின் தலால் வளைகுடா நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் முக்கியமான தொழிலதிபர் ஆவார். ஆப்பிள், ட்விட்டர், சிட்டி குரூப் ஆப் ஹோட்டல்ஸ், உட்பட பல முக்கிய பெருநிறுவனங்களில் அதிக முதலீடு செய்திருக்கிறார்.

இவருடன் கைதானவர்களில் தேசிய அரசவை பாதுகாப்பு அமைச்சர் மித்தாப் பின் அப்துல்லா, திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் அமைச்சர் ஆதில் பகே மற்றும் சவுதியின் கப்பற்படை கமாண்டரான சுல்தான் பின் முகம்மது அல் சுல்தான் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்த ஆணையத்தின் தலைவரான எம்பிஎஸ், சவூதி மன்னரின் மகன்.

உலக முஸ்லிம் நாடுகளில் நிலவி வரும் மன்னராட்சிகளில் இருந்து லேசாக மாறுபட்டது சவுதி அரேபியா. அந்த நாட்டின் ஆட்சியாளர் குடும்பத்தினர் இடையே கடைபிடிக்கப்படும் ஜனநாயகம் அல்லது அரசாட்சி முறையால் சவுதி வேறுபடுகிறது. தந்தைக்கு பின் மகன், இவருக்கு பின் பேரன் என அரசர்கள் அமர்த்தப்படுவதில்லை. மாறாக அரசவை குடும்பத்தார் இடையே அடுத்த அரசர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். தற்போது இந்த ஜனநாயகத்தில் தனது நேரடிக் குடும்பத்தை மட்டும் ஆட்சி பொறுப்பில் அமர்த்தும் பொருட்டு மன்னர் சல்மான் கைது நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், சவுதியின் எதிர்கால ஆட்சி தனது நேரடி வாரிசுகளின் கீழ் அமைவதற்காக மன்னர் சல்மானின் பெயரில் எம்பிஎஸ் எடுத்த நடவடிக்கை எனவும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

சவுதியின் மன்னர் குடும்பம்

சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியாவில் பல்வேறு பழங்குடியினர் குழுக்களாக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து சவுதி அரேபியா நாடு 1930-ல் அமைக்கப்பட்டது. இதை உருவாக்கியவரான அப்துலஜீஸ் அல் சவூத் என்பவர் நாட்டுடன் தனது பெயரையும் சேர்த்து சவுதி அரேபியா என்றாக்கினார். அப்போது இருந்த சிறிய குடும்பத்தில் அடுத்த மன்னரான பட்டத்து இளவரசரை தேர்ந்தெடுப்பது எளிதாக இருந்தது. மற்ற இளைஞர்கள் அனைவரும் இளவரசர்களாக அமர்த்தப்பட்டு, அரசவையின் அமைச்சரவையிலும் இடம் பெறுகிறார்கள். இதில், அரசரின் சகோதரர் அல்லது சகோதரி மகன், பேரன் என யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். தற்போது ஆயிரக்கணக்கில் பெருகிவிட்ட மன்னரின் குடும்ப உறுப்பினர்களால் பட்டத்து இளவரசர் தேர்ந்தெடுப்பதில் பெரும் அரசியல் நிகழத் தொடங்கி விட்டது. தற்போதைய பட்டத்து இளவரசரான எம்பிஎஸ் கடந்த ஜுனில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது இடத்தில் இருந்த முகம்மது பின் நய்யிப் மீது போதை மருந்து உண்ணும் புகார் எழுந்ததால் அவரை மன்னர் சல்மான் பதவி நீக்கம் செய்தார். ஆனால், அதன் மீது இதுவரை எந்த விசாரணையும் அமைக்கப்படவில்லை. இதன் பின்னணியிலும் சவுதி குடும்பத்து மிரட்டல் அரசியல் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது கைதாகி உள்ளவர்கள் அனைவரும் பட்டத்து இளவரசரான எம்பிஎஸ்-க்கு எதிரானவர்கள் எனவும், தனக்கு பின் மகன் மன்னராவதற்கு அவர்களால் எதிர்ப்பு கிளம்பும் என சல்மான் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒரு மிரட்டலாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தலைநகரான ரியாத்தில் உள்ள ஏழு, ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் அறைகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதின் மூலம் எதிர்ப்புகள் அடங்கிவிட்டால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாது எனத் தெரியவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து