மதுரை விமான நிலையத்தில் வைகோ - மு.க.ஸ்டாலின் சந்திப்பு

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      தமிழகம்
stalin-vaiko 2017 11 8

Source: provided

மதுரை : மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினும் வைகோவும் சந்தித்து பேசினர். அப்போது கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்ததாக  வைகோ கூறினார்.

பண மதிப்பிழப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். அப்போது கலிங்கப்பட்டியில் இருந்து சென்னை செல்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்தார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியே வந்தபோது வைகோ அங்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இருவரும் கை குலுக்கி நலம் விசாரித்தனர். மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்ததாக வைகோவிடம், மு.க.ஸ்டாலின் கூறினார்.


அப்போது வைகோ தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரிடம் விசாரித்தார். மு.க.ஸ்டாலின், அப்பா நலமாக இருப்பதாக தெரிவித்தார். விரைவில் தலைவரை வீட்டில் வந்து சந்திப்பதாக வைகோ, மு.க.ஸ்டாலினிடம் கூறினார். கருணாநிதியின் உடல்நிலை குறித்தும், மோடி சந்திப்பு குறித்தும் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் வைகோ.

சுமார் 5 நிமிடம் இருவரும் பேசிக்கொண்டனர். இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் வந்த தனியார் விமானத்தில் வைகோ சென்னை புறப்பட்டுச் சென்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே தி.மு.க. உடன் நெருக்கம் காட்டி வருகிறார் வைகோ. கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தார். முரசொலி பவளவிழாவில் பங்கேற்று பேசினார்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் தற்போது வி.சி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் நெருக்கம் பாராட்டி வருகின்றனர். முரசொலி பவள விழா, கருணாநிதி சட்டசபை வைரவிழா என மிகப்பெரிய விழாக்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் தேசிய கட்சி தலைவர்கள், மாநில தலைவர்கள் பங்கேற்றனர்.  தமிழகத்தில் கட்சி பேதமின்றி இப்போது அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். எதிர் எதிர் கொள்கைகள் கொண்டவர்கள் கூட விழாக்களில் சந்தித்தால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி பேசிக்கொள்கின்றனர் அது போன்ற ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று ம.தி.மு.க.வினர் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து