முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் விலக்கில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் பங்கேற்பு

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

தேனி : தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் விலக்கில் தமிழக அரசு சார்பில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிறார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

மதுரையில் தொடங்கி...

எம்.ஜி.ஆர் நினைவை போற்றும் வகையிலும், அவர் ஆற்றிய பணிகள், அவரை பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மிக சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதன் தொடக்கவிழா கடந்த 30.06.2017 அன்று மதுரை மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பல்வேறு மாவட்டங்களில்...

அதனைத் தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளுர், ஈரோடு, வேலூர், நாமக்கல், நாகப்பட்டிணம், கிருஷ்ணகிரி, சேலம், கரூர், தருமபுரி, புதுக்கோட்டை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தை திறந்து வைத்தும், அரசின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி  சிறப்பித்தார்.

விளையாட்டுப் போட்டிகள்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் மாவட்டங்களில், எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மற்றும் அரசியல் மூலம் அவர்கள் ஆற்றிய சமூகத்தொண்டு, சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் பற்றி பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்திடும் வகையில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றை விழாவின்போது பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், எம்.ஜி.ஆர். பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்படங்களும் கிராமப்புறங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை கொண்ட விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டுள்ளன.

முதல்வர் நலத்திட்ட உதவி...

அந்த வகையில் தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி, போடிநாயக்கனூர் விலக்கு, எம்.ஜி.ஆர் திடலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, ரூ.21 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான முடியுற்ற 26 திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.22 கோடியே 48 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான 22 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 20293 பயனாளிகளுக்கு ரூ.99 கோடியே 46 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார்.

துணை முதல்வர் முன்னிலை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கவும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கவும் உள்ளார். மக்களவை துணைத் தலைவர் டாக்டர். மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுகிறார். இவ்விழாவில் அமைச்சர்கள், சட்டப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா பங்கேற்று சிறப்பிக்கின்றனர். தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் வாழ்த்துரை வழங்குகின்றனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுகிறார். தேனி மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் நன்றியுரையாற்றுகிறார்.

இன்று பிற்பகல் 1.00 மணியளவில் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி, தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து