மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நடிகர் கமல் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேட்டி

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      தமிழகம்
Nirmala Sitharaman 2017 01 28 0

சென்னை :  பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நடிகர் கமல்ஹாசன் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
நோட்டுகள் செல்லாது

சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.தலைமை அலுவலகமான கமலாயத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.வின் தேர்தல் அறிக்கையில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வெளிநாட்டில் வரிக்கட்டாமல் சொத்து சேர்க்கப்பட்ட பதுக்கல் பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உயர்மதிப்பு நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு 2013 - 14 ம் ஆண்டில் இருந்தே மேற்கொள்ளப்பட்டது. 2013 முதல் 2015-ம் ஆண்டு வரையில் சர்வதேச அமைப்புகள் அளித்த அறிக்கையின்படி உயர்மதிப்பு நோட்டுகள்தான் கருப்பு பணமாக வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நடவடிக்கை

அதன் அடிப்படையில் தான் ரூ.1000, ரூ.500 சட்டப்படி பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதனால் வங்கி கணக்கில் பதுக்கப்பட்டிருந்த பணம் திரும்ப வந்தது. மேலும் வெளிப்படையான முறையில் பண பரிமாற்றம் நடந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நல்லது. இதன் முலம் யார் யார் வரி செலுத்துகின்றனர் என்பது தெரியவரும். தற்பொழுது பண பரிமாற்றம் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது. பண மதிப்பிழப்பு மீதான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

அரசு நடவடிக்கை

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசு திட்டங்களிலிருந்து போலியான நபர்கள் ஆதாயம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. ரொக்கப் பயன்பாடு அதிகளவில் இருந்தது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பயங்கரவாதிகளிடம் இருந்த பணம் முடங்கியது. இதனால் காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 4 ஆயிரத்திலிருந்து 600 ஆக குறைந்தது. பெரிய செலவுகளை ரொக்கமாக மேற்கொண்டால் யாருக்கும் நல்லதல்ல. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கறுப்புப்பணத்தை மீட்க...

படிப்படியாக ரொக்கப்பண உபயோகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பொருளாதார வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கவும், கறுப்புப்பணத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.500, ரூ.1000 நீக்கத்தை முன்கூட்டியே அறிவித்திருந்தால் பணம் பதுக்கியிருப்பவர்கள் சிக்கியிருக்க மாட்டார்கள். ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, வங்கிக்கு வந்த அனைத்து பணமும் வெள்ளை பணம் அல்ல. பணமதிப்பிழப்பு திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்க முயற்சி எடுக்கப்படும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

வேதனையைத் தருகிறது

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வளவு பணத்தை புழக்கத்தில் விடுவது என்பதை ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசு முடிவு செய்வது அல்ல. படிப்படியாக ரொக்க உபயோகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து அரசு தொடர்ந்து விளக்கி வருகிறது. மன்மோகன் சிங் கூறிய கருத்து மனத்திற்கு வேதனையைத் தருகிறது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது ஊழல் நடந்து கொண்டே இருந்தது. தனது ஆட்சியில் நடந்த ஊழலை மன்மோகன் சிங் கண்டும் காணாமல் இருந்தார். மன்மோகன் சிங் ஆட்சியில் காற்று, நிலம் என பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. பல்வேறு ஊழல்களை கண்டுகொள்ளாமல் ஆட்சி நடத்திய மன்மோகனின் விமர்சனம் வேதனை அளிக்கிறது. பிரதமராக இருந்த போது மன்மோகன்சிங் ஒரு கருவியாகவே செயல்பட்டார்.

முழுமையாக அறிந்து ....

கருப்பு பணத்தை ஆதரிப்பவர்களே, கருப்பு தினமாக அனுசரிப்பார்கள். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். வருமானத்திற்கு அதிகமான பணம் குறித்து விசாரிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கமல்ஹாசன் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் அரசியலுக்கு வர யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு என தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது பா.ஜ.தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், சென்னை கோட்டப்பொருப்பாளர் சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து