நெடுஞ்சாலை துறையில் 89 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      தமிழகம்
cm edapadi employ order 2017 11 8

சென்னை : நெடுஞ்சாலைத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 89 இளநிலை உதவியாளர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

கருணை அடிப்படையில்...

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-


நெடுஞ்சாலைத் துறையின் திட்ட செயலாக்கம் மற்றும் நிர்வாக பணிகளுக்கு உதவிட இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு அலகுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 550 இளநிலை உதவியாளர் பணியிடங்களில் எற்படும் காலிப் பணியிடங்கள் அவ்வப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நேரடியாகவும், கருணை அடிப்படையிலும் மற்றும் பதவி உயர்வின் மூலமும் நிரப்பப்படுகின்றன.

7 நபர்களுக்கு ஆணை

அந்தவகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 89 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை திறம்பட கண்காணிக்கவும், துறையின் வளங்களை பாதுகாக்கவும், வளங்களை சீராக ஒதுக்கிடவும், திட்டங்கள் குறித்த தகவல்களை பொது மக்களுக்கு அளித்திடவும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை நெடுஞ்சாலைத் துறை உருவாக்கியுள்ளது.

புதிய வலைதளம்

நெடுஞ்சாலைத் துறையின் வலைதளமானது, உபயோகிப்பவர்களின் வசதிக்காகவும், எளிதாக பயன்படுத்தும் வகையிலும், புதியதோற்றப் பொலிவுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையின் வலைதளத்தினை (http://www.tnhighways.gov.in) முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். இதன்மூலம், பொது மக்கள் வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களை எளிதாக பார்வையிட இயலும். மேலும், புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த வலைதளம், மாற்றுத் திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் ஒலி வடிவத்துடனும், எழுத்துரு அளவு மற்றும் வண்ணங்களை மாற்றும் அம்சங்களோடும் உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் கோதண்டராமன் கலந்து கொண்டனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து