காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஒமர் அப்துல்லாவுடன் மத்திய அரசு பிரதிநிதி ஆலோசனை

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      இந்தியா
dineshvar SHARMA 2017 11 06

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கான மத்திய அரசின் பிரதிநிதி தினேஷ்வர் சர்மா அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் பிரதிநிதியாக உளவுத் துறை முன்னாள் தலைவர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 5 நாள் பயணமாக கடந்த திங்கள்கிழமை ஜம்மு காஷ்மீர் சென்றார். இந்நிலையில் அவர் நேற்று ஒமர் அப்துல்லாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதுகுறித்து ஒமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியபோது, “இது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு ஆகும். மாநிலத்தின் தற்போதைய நிலவரம் குறித்து நாங்கள் பேசினோம். மேலும் இங்கு தினேஷ்வர் மேற்கொள்ளும் பயணம் அர்த்தமுள்ளதாக இருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் பேசினோம்” என்றார்.


இந்த சந்திப்பு குறித்து நிருபர்களிடம் ஒமர் கூறியபோது, “மத்திய அரசு தன்னிடம் ஒப்படைத்துள்ள பணியை வெற்றிகரமாக முடித்திட எனது கருத்துகளை தினேஷ்வர் கேட்டார். இருவரும் பேசிய தகவலை வெளியிட முடியாது. ஆயினும் எனது யோசனைகளை தினேஷ்வர் செயல்படுத்துவார் என நம்புகிறேன்.

மாநிலத்துக்கு சுயாட்சி தர வேண்டும் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட சுதந்திரம் கேட்பதற்கு ஒப்பானது என பிரதமர் மோடி கூறியிருப்பது எங்கள் எதிர்பார்ப்புகளை நீர்த்துப்போகச் செய்துவிட்டது. தினேஷ்வர் சர்மா எங்கள் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது, சுயாட்சி அதிகாரம் பற்றியும் எங்கள் அரசியல் திட்டம் பற்றியும் பேசுவோம்” என்றார்.

மத்திய அரசின் பிரதிநிதியை சந்திக்க மாட்டோம் என்று பிரிவினைவாத தலைவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அவர்களை சந்திக்க முயன்று வருவதாக தினேஷ்வர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. யூசுப் தரிகாமி, மக்கள் ஜனநாயக முன்னணி தலைவர் ஹக்கிம் யாசீன், தேசிய ஜனநாயக கட்சி தலைவர் குலாம் ஹாசன் மீர் ஆகியோர் நேற்று தினேஷ்வர் சர்மாவை சந்தித்துப் பேசினர்.

பின்னர் மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது யூசுப் தரிகாமி கூறியபோது, “நேர்மையான அர்த்தமுள்ள பேச்சு நடத்தினால் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் அமைதி சாத்தியமாகும். பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதித்தால் அமைதி சாத்தியமில்லை.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் 370-வது பிரிவு உள்ளிட்ட உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவை பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பேச்சு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். பிரிவினைவாத தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் பேசவேண்டும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து