டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் மூலம் நீர் தெளிக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு முடிவு

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      இந்தியா
Arvind Kejriwal 2017 06 02

புதுடெல்லி: டெல்லியில் நேற்று இரண்டாவது நாளாக கடும் புகைப்பனி மற்றும் காற்று மாசு காணப்பட்டதால், ஹெலிகாப்டர் மூலம் வானத்தில் இருந்து நீர் தெளிப்பது உட்பட அதிரடி முயற்சிகளில கெஜ்ரிவால் அரசு இறங்கவுள்ளது.

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் தொடங்கும் போதும், முடியும் போதும் பனிமூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். இதனால் விமானப் போக்குவரத்து கடுமையாகவும் ரயில் மற்றும் வாகனப் போக்குவரத்து மிதமான அளவிலும் பாதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொடங்கிய குளிரில் புகைப்பனி நேற்று முன்தினம் திடீர் என அதிகமானது. இதையொட்டி தொடக்கப் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. மறுநாளும் மாசுக்களின் அளவு பாதுகாப்பான அளவை விட குறையாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியபோது, “தொடக்கப் பள்ளிகளுக்கு ஞாயிறு வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை, மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் அதை தவிர்ப்பார்கள் என எண்ணுகிறேன். இதற்கான ஆலோசனை அறிக்கையை அரசு வெளியிடும். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட முதியோர் மற்றும் குழந்தைகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க டெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு முறை கொண்டுவரத் தயாராக உள்ளோம்” என்றார்.

டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியாணா, உ.பி., உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இது அறுவடைக் காலம் ஆகும். அறுவடையில் மிஞ்சும் காய்ந்த பயிர்களுக்கு விவசாயிகள் தீ வைக்கின்றனர். இதனால் ஏற்படும் புகை மண்டலம் டெல்லியில் மாசுக்களை ஏற்படுத்துகிறது. அதேவேளையில், குளிர்கால மும் தொடங்குவதால் ஏற்கெனவே டெல்லியில் படிந்துள்ள மாசுக்களுடன் சேர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு இதன் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

அண்டை மாநிலங்கள் எஞ்சிய பயிரை எரித்து டெல்லியை ‘கேஸ் சேம்பர்’ ஆக மாற்றிவிடுவதாக கெஜ்ரிவால் புகார் கூறியுள்ளார். இத்தனைக்கும் டெல்லியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

டெல்லியின் மாசு பிரச்சினை மீதான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மாசுக் கட்டுப்பாடு நிபுணர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவசர நடவடிக்கைகள் எடுத்து மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும் என டெல்லி அரசுக்கு இக்குழு வலியுறுத்தியுள்ளது. மழை வந்தால் ஒழிய தற்போது பனிமூட்டம் குறைய வாய்ப்பில்லை. இந்நிலையில் டெல்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் உசைன் நேற்று முன்தினம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். அதில் மாசுக்களை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து நீர் தெளிக்க அனுமதி கேட்டிருந்தார். இதற்கு அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அனுப்பியுள்ளார். அதில், “ஹெலிகாப்டர் மூலம் நீர் தெளிப்பது அதிக செலவை ஏற்படுத்தும் ஒரு நடைமுறையாகும். என்றாலும் இதனால் பலன் கிடைக்கும் என டெல்லி அரசு கருதினால் அதை செய்ய எந்தத் தடையும் இல்லை” என்று பதிலளித்து மேலும் சில யோசனைகளை கூறியுள்ளார்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து