தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி கணிசமாக குறைந்துவிட்டது நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதம்

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      இந்தியா
arun jaitley 2017 6 18

புதுடெல்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி குறைந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்தது. இதையடுத்து, இந்த நாளை கறுப்புப் பணத்துக்கு எதிரான நாளாக பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது. இதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆளும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தலைநகர் டெல்லியில் மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி தலைமையில் பேரணி நடைபெற்றது. லீ மெரிடியன் ஓட்டல் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி வர்த்தக பகுதியான கன்னாட் பிளேஸ் பகுதியில் முடிந்தது. பேரணியின்போது சுமார் 300 பாஜக தொண்டர்கள் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.


இந்தப் பேரணியின்போது மனோஜ் திவாரி கூறியபோது, “பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியின் ஊழல் வேர் அறுந்து விட்டது. எனவேதான் இந்த நாளை அக்கட்சி கறுப்பு தினமாக அனுசரிக்கிறது. இந்த நடவடிக்கையால் தீவிரவாத அமைப்புகளின் முதுகெலும்பு உடைந்துவிட்டது என்றார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூறியபோது, “பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக தீவிரவாதமும் நக்சலிஸமும் தலைவிரித்தாடிய ஜம்மு காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கரில் பணப் புழக்கம் குறைந்துள்ளது. இதனால் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறியும் சம்பவங்கள் குறைந்துள்ளன” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து