வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 1,379 ஏரி, குளங்கள் நிரம்பின

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      தமிழகம்
rain 2017 10 12

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் இதுவரை 1,379 ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 2 ஏரிகளும் (வேளச்சேரி, கொளத்தூர்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் 239 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 217 ஏரிகளும் நிரம்பியுள்ளன.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்தது. இதையடுத்து அக்டோபர் 26-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழையும் தொடக்கத்தில் இருந்தே தீவிரமாகியது. அத்துடன் வங்கக் கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால், கடந்த 10 நாட்களாக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டன.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏரி, குளங்கள் இல்லை. மீதமுள்ள 31 மாவட்டங்களிலும் 14,098 ஏரிகள், குளங்கள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.


இவற்றில் தற்போது 1,379 ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டன. சென்னை மாவட்டத்தில் உள்ள 2 ஏரிகளும் (வேளச்சேரி, கொளத்தூர்) நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 961 ஏரிகளில் 239-ம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 593 ஏரிகளில் 217-ம் நிரம்பியிருக்கின்றன அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 252 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஈரோடு, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு ஏரிகூட நிரம்பவில்லை.

பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘தமிழக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,098 ஏரி, குளங்களில் நவம்பர் 8-ம் தேதி (நேற்று) நிலவரப்படி 1,379 ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டன. 1,325 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது. 1,831 ஏரி, குளங்களில் 50 முதல் 75 சதவீதம் வரையும் 4,705 ஏரி, குளங்களில் 25 முதல் 50 சதவீதம் வரையும் நீர்இருப்பு உள்ளது. 4,858 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் உள்ளது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து