முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் 1,900 அதிகாரிகள் ஒரே நேரத்தில் ரெய்டு: சசிகலா குடும்பத்தினர் வீடுகள் - நிறுவனங்களில் வருமான வரிசோதனை

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட 187-க்கும் மேற்பட்ட இடங்களில் சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நேற்று ஒரேநேரத்தில் வருமான வரிசோதனை நடந்தது. 1,900 அதிகாரிகள் ஈடுபட்ட இந்த அதிரடி சோதனையில், தினகரன், நடராஜன், இளவரசி மகன் வீடுகள் மற்றும் அலுவலகங்களும் அடக்கம். வருமான வரித்துறையினரின் இந்த சோதனையால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா உறவினர் வீடுகள், தொழிலகங்கள் என 187-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த நேற்று நடைப்பெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் முக்கியமான ஆவணங்கள் ஏராளமாக சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது தொடர்பான சோதனை தொடர்ந்து நடைபெறும் என வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற இந்த பிரம்மாண்ட சோதனை தமிழ்நாட்டில் மட்டும் 105 இடங்களில் நடந்தது. சென்னையில் 20 இடங்கள், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் வருமான வரி ஆணையர்கள் 6 பேர் உட்பட 1,900 அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 10 பேர் வரை இடம்பெற்றனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1000 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். ஸ்ரீனி வெட்ஸ் மஹி என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோல் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை நடந்த இடங்கள்

சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் வீடு, ஈக்காடு தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம்,  போயஸ்கார்டனில் உள்ள ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகம், ஈக்காடு தாங்கலில் உள்ள நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம், வேளச்சேரியில் உள்ள ஜாஸ் அலுவலகம், தியாகராய நகரில் உள்ள இளவரசி மகள் டாக்டர் கிருஷ்ணப்பிரியா வீடு. நுங்கம்பாக்கத்தில் உள்ள இளவரசி மகன் விவேக் வீடு,  பெசன்ட் நகரில் உள்ள நடராஜன் வீடு, படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டு, கர்நாடக மாநில அ.தி. மு.க. அம்மா அணி செயலாளராக இருக்கும். புகழேந்தியின் பெங்களூரு முருகேஷ்பாளையம் முனுசாமப்பா லே-அவுட் பகுதியில் உள்ள வீடு.

டி.டி.வி.தினகரனின் வீடு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகரில் டி.டி.வி.தினகரனின் வீடு, மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் தம்பி  திவாகரன் வீடு, தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங் கடேஷ் வீடு, மன்னார்குடி அன்னவாசல்  தெருவில் உள்ள தினகரன் அணி ஆதரவாளரும் , அ.தி.மு.க. அம்மா அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளருமான எஸ்.காமராஜ்  வீடு, மன்னார்குடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராசுப்பிள்ளையின் வீடு, திருவாரூர் அருகே கீழ திருப்பாலங்குடியில் தினகரனின் உதவியாளர் விநாயகத்தின் வீடு, தஞ்சை வடக்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வேலு கார்த்திகேயன் வீடு.

சசிகலாவின் கணவர்...

சசிகலாவின் அண்ணன் மனைவியான இளவரசியின் சம்பந்தியும்  ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை என்ஜினீயருமான  கலியபெருமாளின் வீடு, திருச்சி கே.கே.நகர் உடையான் பட்டியில் உள்ள  அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதியின் தம்பி யும், தினகரன் அணியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயனின் வீடு, அறந்தாங்கி அருகே நெற்குப்பையில் உள்ள பரணி கார்த்திகேயனின் வீடு,  தஞ்சை அருளானந்த நகர் பகுதியில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் வீடு, சசிகலாவின் உறவினர் மறைந்த மகாதேவன் வீடு, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இல்லத்தில் சோதனை
கர்சன் எஸ்டேட், மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் ஆதரவாளரான பொன்.வாசுகிராமன் வீடு, ஜெயலலிதாவின் மருத்துவரும், தினகரனின் உறவினருமான டாக்டர். சிவக்குமாரின் இல்லம், டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும், வழக்கறிஞருமான பாலுச்சாமி வீடு, திருத்துறைப்பூண்டியில் திவாகரன் நண்பரான ஓய்வுபெற்ற வேளாண் இயக்குநர் நடேசன் வீடு, கோடநாடு எஸ்டேட் கணக்கை நிர்வகிக்கும் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஜாஸ் சினிமா அலுவலகம்

திருச்சியில் ஜெயலலிதாவின் மருத்துவரும், தினகரனின் உறவினருமான டாக்டர். சிவக்குமாரின் இல்லம், மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் ஆதரவாளரான பொன்.வாசுகிராமன் வீடு, வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் வடகாட்டில் வெங்கட் வீடு, சசிகலாவின் உறவினர் விவேக் நடத்தும் ஜாஸ் சினிமா அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான லக்ஸ் சினிமா அரங்குகளில் நடந்தது.  தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரும் நிறுவனமாக வளர்ந்தது ஜாஸ் சினிமாஸ். இதனை சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஜாஸ் நிறுவனத்தில் நேற்று காலை முதலே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படம் பார்க்க ஆர்வத்துடன் வந்த பல நூறு பேர் காட்சிகள் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வருமான வரித்துறை விளக்கம்

நேற்று நடைபெற்ற சோதனை தொடர்பாக வருமான வரித்துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் வருமாறு:-

சசிகலா பெயரில் 4 போலி நிறுவனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை சசிகலா நடத்தி வந்த போலி நிறுவனங்கள். இந்த போலி நிறுவனங்கள் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா டி.வி.க்கு தொடர்புடையதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சோதனை தொடரும்...

நேற்று நடைப்பெற்ற வருமான வரி சோதனையில், பல இடங்களில் இருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சசிகலா அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா வீட்டிலும் ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த ஆவணங்களின் மதிப்பீட்டை கணக்கீடும் பணி தற்போது நடைபெறுகிறது. ஆகையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துகள் விவரங்களை உடனே தெரிவிக்க இயலாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் வருமான வரித்துறையினரின் சோதனையும் விசாரணையும் தொடர்ந்து நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திவாகரன்

185க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில், சசிகலா சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கலைக் கல்லூரியில் நேற்று அதிகாலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்தது.

கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஐ.டி ரெய்டை அடுத்து திவாகரன் வீட்டுக்கு முன், அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்தனர். இதனை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், திவாகரனை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

திருமணத்திற்கு செல்வது போல் ரெய்டு !

சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ள திருமணத்திற்கு செல்வது போன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

வருமானவரித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநேரத்தில் 6 வருமானவரித்துறை ஆணையர்கள் தலைமையில் 1,900 அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 1000 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும், திருவாரூரில் 12க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.  “ஸ்ரீனி வெட்ஸ் மஹி” என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். இதற்காக வாடகைக் கார்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் அதிகாரிகள் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து