சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் சந்திப்பு: வடகொரியா அணு ஆயுத விவகாரம் குறித்து ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      உலகம்
CHINA-US-TRUMP 2017 11 10

பெய்ஜிங்: சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து வடகொரியா அணு ஆயுத விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டிரம்ப் முதன்முறையாக 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டொனால்டு டிரம்ப் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியாவால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இணைந்து பணியாற்ற வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.


இதையடுத்து, வடகொரியா உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜின்பிங் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பரில் அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையையும் நடத்தியது. இதனால், அமெரிக்கா வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

எனவே, வடகொரியாவுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள சீனா இந்த விவகாரத்தில் தலையிட்டு அணு ஆயுத சோதனையை தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இந்நிலையில்தான் டிரம்ப் - ஜின்பிங் சந்தித்துப் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக, இருதரப்பு வர்த்தக உறவை பலப்படுத்துவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் குழுவினர் உடன் இருந்தனர். அப்போது இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து