முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் 178 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு - அருண்ஜெட்லி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

கெளகாத்தி : 178 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இனி 50 பொருட்களுக்கு மட்டும் 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

23-வது ஜி.எஸ்.டி கூட்டம்

கெளகாத்தியில் நடைபெற்ற 23-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜவுளி பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டு உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

ஹோட்டல்களுக்கு ஜி.எஸ்.டி

ஏசி அல்லாத ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரியை 1 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும், ஏசி ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் கெளகாத்தியில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற  இக்கூட்டத்தில்  தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். மக்கள் அதிக அளவில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் கணிசமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக அரசு கோரிக்கை  ஏற்பு

இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 178-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 58 இனங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  விளைபொருட்கள் சேமிப்பு கட்டமைப்புக்கான ஜிஎஸ்டி 12 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர்களுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இனி 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஷேவிங் கிரீம், ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான வரியை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

விலை குறைக்கப்பட்டுள்ள பொருட்கள் விவரம்:

* ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* டிராக்டர் உதிரி பாகங்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைகிறது,

* ரேஷன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுதும் ரத்து

* ஷேவிக் கிரீம், பற்பசை உள்பட 177 பொருட்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி குறைப்பு

* ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கு வரி 5% ஆக குறைப்பு.

* விளைபொருட்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12% ஆக குறைப்பு.

* செங்கல் தொழில் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான சேவை வரி குறைப்பு.

* சிகரெட் உட்பட பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள், ஆடம்பரப் பொருட்களை 28% வரிப்பிரிவில் வைக்க முடிவு.

* திரைப்படம் தொடர்பான சாதனங்கள், கருவிகளுக்கு 28% லிருந்து 18% ஆக வரியை குறைக்க பரிந்துரைக்கபட்டு உள்ளது.

* 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரிப்பிரிவு.

* 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரி விதிப்புக்கு மாற்றப்பட்ட பொருட்களில் டிட்டர்ஜென்ட், மார்பிள், டாய்லெட் உபகரணங்களும் அடங்கும்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து