முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செட்டாப் பாக்ஸ்களுக்கு பணம் வசூலித்தால் உரிமம் ரத்து கேபிள் ஆபரேட்டர்களுக்கு அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- செட்டாப் பாக்ஸ்களுக்கு பணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் 27 பள்ளிகளைச் சார்ந்த 3,187 மாணாக்கர்களுக்கு மொத்தம் ரூ.4.77 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்குதல் என்ற மகத்தான திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். இத்திட்டமானது இந்திய திருநாட்டில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இத்தகைய சிறப்பான திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளில்  மொத்தம் ரூ.8,900 கோடி மதிப்பில் ஏறத்தாழ 33 லட்சம் மாணவ மாணவியர்கள் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளைப் பெற்று பயனடையும் வகையில் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் ஏறத்தாழ 5,35,000 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட திட்டமிடப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக வழங்கப்பட்டு வருகின்றன.
 குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நடப்பு கல்வியாண்டில் 85 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சார்ந்த 10,778 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட திட்டமிடப்பட்டு 85 சதவீத மாணாக்கர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் மீதமுள்ள மாணாக்கர்களுக்கும் வழங்கப்பட்டு 100 சதவீதம் நிறைவு செய்யப்படும். இன்றைய தினம் மட்டும் கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 27 பள்ளிகளில் பயிலும் 3,187 மாணாக்கர்களுக்கு ரூ.4.77 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.  இதுதவிர பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் தரமான டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைக்காட்சி சேனல்களை பார்த்து பயனடைந்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் விலையில்லா செட்டாப் பாக்ஸ்   வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மொத்தம் 70.52 லட்சம் அரசு கேபிள் சந்தாதாரர்கள் உள்ளனர். செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டத்தைப் பொறுத்த வரையில் 100 சதவீதம் விலையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.  செயல்படுத்தல் கட்டணமாக மட்டும் ரூ.200  வசூலிக்கப்படுகின்றது. 
 இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள்  தமிழ்நாடு அரசின் விலையில்லா செட்டப் பாக்ஸ்களை பொதுமக்களிடத்தில் பணம் வசூலித்து விற்பனை செய்வதாக புகார்கள் வருகின்றன. அவ்வாறு பணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் குறித்து பொதுமக்கள் தயங்காமல் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திட வேண்டும். தமிழ்நாடு அரசின் விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கிட பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார். இவ்விழாக்களில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முனியசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட  பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து