சோலார் பேனல் ஊழல் வழக்கில் உம்மன் சாண்டி மீது குற்றச்சாட்டு சரிதாநாயருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      இந்தியா
Pinarayi Vijayan 2017 9 9

திருவனந்தபுரம்: எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையில், கேரள சட்டசபையில் சோலார் பேனல் வழக்கின் விசாரணை அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.சிவராஜன் சமர்ப்பித்த இந்த அறிக்கை 1000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டிருந்தது. 4 தொகுதிகள் ஆங்கிலத்திலும் ஒரு தொகுதி மலையாளத்திலும் இருந்தது. அறிக்கையை முதல்வர் தாக்கல் செய்தபிறகு அதன் பிரதி அனைத்து உறுப்பினர்களுக்கும் தரப்பட்டன.

கேரளாவில் சரிதா நாயர், அவருடன் வசித்து வந்த பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. கேரளாவில் கடந்த 2013-ல் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது இந்த ஊழல் வெளிப்பட்டது. இந்நிலையில் சரிதா நாயருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக உம்மன் சாண்டி, அவரது அலுவலகம், 3 அலுவலக ஊழியர்கள் மீது விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்களை ஏமாற்ற சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு உம்மன் சாண்டி, அவரது அலுவலக ஊழியர்கள் மூவரும் உதவியதாக கூறப்பட்டுள்ளது.
உம்மன் சாண்டியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அரியாடன் முகம்மது, அடூர் பிரகாஷ், ஏ.பி. அனில் குமார், திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உம்மன் சாண்டியை குற்றமற்றவராக காண்பிக்க அப்போதைய உள்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. ஹிபி ஏடன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பென்னி பெஹனன், தம்பனூர் ரவி, மக்களவை உறுப்பினர்கள் ஜோஸ் கே. மணி, கே.சி. வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த அறிக்கையில் சரிதா நாயர் எழுதிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டவர்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசும்போது, “சரிதா நாயர் மற்றும் நீங்கள் (பினராயி விஜயன்) கூறியதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உம்மன் சாண்டி கண்ணியத்துடனும் எவ்வித புகாருக்கு இடமளிக்காமலும் சட்டப்பேரவை உறுப்பினராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றியவர். அவரைப் போன்ற மூத்த தலைவர்கள் மீது அரசியல் பழி தீர்க்க இந்த அறிக்கையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து