147 இடங்களில் தொடர்ந்து நடந்த வருமான வரி சோதனை: சசிகலா தொடங்கிய போலி நிறுவனங்கள்

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      தமிழகம்
sasikala 2017 11 10

சென்னை : போலி நிறுவனங்கள் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா மற்றும் டி.டி.வி தினகரனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

சசிகலா, டி.டி.வி தினகரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். இதுகுறித்து பேசிய வருமான வரித்துறை புலனாய்வு இயக்குனர், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் அளித்துள்ளார். 147 இடங்களில் இந்த சோதனை நேற்று நடந்துள்ளது. மேலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா, டி.டி.வி தினகரனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2-வது நாளாக...

சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரி சோதனை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. 'ஆபரேஷன் கிளீன் பிளாக்மணி' என்ற சோதனை நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு தொடங்கியது. 1900 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சோதனை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தில் 187 இடங்களில் நடைபெற்றது. 350 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடைபெற்றதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

40 இடங்களில் சோதனை முடிந்தது

'ஆபரேஷன் க்ளீன் பிளாக்மணி' என்று பெயரிடப்பட்ட இந்த சோதனை 187 இடங்களில் நடந்ததை அடுத்து 40 இடங்களில் சோதனை முடிந்தது. நேற்று மீண்டும் 147 இடங்களில் சோதனை தொடர்ந்தது. டெல்லி, கொச்சி, ஐதராபாத் போன்ற இடங்களிலிருந்து கூடுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடந்தது. ஜெயா டிவி இயக்குநர் விவேக் ஜெயராமன் வீடு, டிடிவி தினகரன் அலுவலகம், தி.நகரில் உள்ள விவேக் ஜெயராமன் சகோதரி வீடு, ஜெயா டிவி அலுவலகம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்த து. டி.டி.வி. தினகரன் மனைவி அனுராதாவுக்கு சொந்தமான சென்னை அடையாறில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

திரைப்படக் காட்சிகள் ரத்து

நமது எம்ஜிஆர் அலுவலகம், ஜாஸ் கார்ப்பரேட் அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடந்தது. திரையரங்கு உள்ள பீனிக்ஸ் மால் அலுவலகத்திலும் இரண்டாவது நாளாக சோதனை நடந்தது. இதனால் நேற்றும் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சோதனையில் எவ்வளவு கருப்புப்பணம் பிடிபட்டது, டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகைகள் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளன என மதிப்பிடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சசிகலா உறவினர்கள், நண்பர்களின் 317 வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சோதனை தொடர்வதை அடுத்து இறுதியாக கணக்கிடும் பணிகள் முடிந்த பின்னரே முழுமையான தகவலைத் தெரிவிப்போம் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவேக் ஜெயராமன் வீட்டில்  வருமான வரி சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விவேக்கிடம் எழுத்துப்பூர்வமாக அறிக்கை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயா டிவி அலுவலகத்தில் விடிய விடிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் . விவேக், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா இல்லங்களிலும் விடிய விடிய சோதனை நடைபெற்றது .

திவாகரனின் வீட்டில் ...

தஞ்சையில் 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தினர். சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்றது.  மன்னார்குடியில் திவாகரனின் வீடு, கல்லூரியில் 2வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்றது. சென்னை அண்ணா நகரில் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வீட்டிலும் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. நாமக்கல்லில் சசிகலா வழக்கறிஞர் செந்தில் வீட்டிலும் செந்தில் நண்பர் சுப்பிரமணியன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அருகிலுள்ள கர்சன் எஸ்டேட்டிலும் நேற்றுமுன்தினம் இரவு முடிவடைந்த சோதனை நேற்று காலை மீண்டும் துவங்கியது. எஸ்டேட் மேலாளர் நடராஜனை அழைத்துச் சென்று அதிகாரிகள் நேற்றும் விசாரணை நடத்தினர்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து