காஷ்மீர், பஞ்சாப் உட்பட 8 மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      இந்தியா
SUPREMECOURT 2017 10 30

புதுடெல்லி: நாட்டின் 8 மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுத்து விட்டது.

இது தொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், “ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லட்சத்தீவுகள், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகிய 8 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கான சட்டப்பூர்வ சலுகைகள் பெரும்பான்மையினரால் தன்னிச்சையாக உறிஞ்சப்படுகின்றன.


மாநில அளவில் அவர்களை சிறுபான்மையினராக அடையாளம் காணாதது அல்லது அறிவிக்காததே இதற்கு காரணம். தொழிற்கல்வித் துறையில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு 20 ஆயிரம் கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம்கள் 68.30 சதவீதம் உள்ளனர்.

இம்மாநிலத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய 753 கல்வி உதவித் தொகையில் 717 உதவித்தொகை முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்து மாணவர்கள் எவருக்கும் இத்தொகை வழங்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே மனுதாரர் ஆணையத்தை அணுகலாம்” என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர்.

மத்திய அரசு 1993-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையின்படி இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் ஆகியோருக்கு மட்டுமே சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. பிறகு 2014-ல் இந்தப் பட்டியலில் ஜைனர்கள் சேர்க்கப்பட்டனர்.

“2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 8 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஜம்மு காஷ்மீர் 28.44 சதவீதம், பஞ்சாப் 38.40சதவீதம் லட்சத்தீவுகள் 2.5சதவீதம், மிசோரம் 2.75சதவீதம் , நாகாலாந்து 8.75சதவீதம், மேகாலயா 11.53சதவீதம், அருணாச்சல பிரதேசம் 29சதவீதம், மணிப்பூர் 31.39சதவீதம் என்ற அளவில் இந்துக்கள் உள்ளனர்.

காஷ்மீர் ( 68.30சதவீதம் ), லட்சத்தீவுகள் (96.20) ஆகிய இரு மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அசாம் (34.20சதவீதம்), மேற்கு வங்கம் (27.5சதவீதம்), கேரளா (26.60சதவீதம்), உ.பி. (19.30), பிகார் (18சதவீதம்) ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளனர்” என்று பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து