குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க வெற்றி பெறும் ‘ஏ.பி.பி-சி.எஸ்.டி.எஸ்’ அமைப்பின் ஆய்வில் தகவல்

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      இந்தியா
Bharatiya-Janata-Party-Logo 2017 11 11

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும். ஆனால், வாக்கு சதவீதம் குறையும்’’ என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான பா.ஜ.க ஆட்சியைத் தக்க வைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதேபோல் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸும் இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக படேல் சமூகத்துக்காக இடஒதுக்கீடு கோரி போராடி வரும் ஹர்திக் படேலை கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், குஜராத் தேர்தல் நிலவரம் குறித்து ‘ஏபிபி-சிஎஸ்டிஎஸ்’ என்ற அமைப்பு கடந்த வாரம் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:


குஜராத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க 113 இடங்களில் இருந்து 121 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி 58 முதல் 64 தொகுதிகளைக் கைப்பற்றும். கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் கணிக்கப்பட்டதை விட குறைந்த வாக்குகளையே பாஜக பெறும் என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய ஆய்வில், பா.ஜ.க 59 சதவீத வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் நடத்திய ஆய்வில் வாக்கு சதவீதம் 47 ஆக இருக்கும் என்று தெரிய வந்தது.

அதே சமயம் காங்கிரஸ் கட்சி மொத்தம் 41 சதவீத வாக்குகளைப் பெறும். இது கடந்த ஆகஸ்ட் மாத ஆய்வில் தெரிய வந்ததை விட 12 சதவீத வாக்குகள் அதிகமாகும்.

குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் காங்கிரஸும் பா.ஜ.க.வும் சமமாக 42 சதவீத வாக்குகளைப் பெறும். வடக்கு குஜராத் பகுதியில் பா.ஜ.க.வை விட 7 சதவீத அதிக வாக்குகளை காங்கிரஸ் பெறும். இந்த 2 பகுதிகளிலும் 107 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய குஜராத்தில் வழக்கமாக பலமுள்ளதாக இருக்கும் காங்கிரஸ், இந்த தேர்தலில் சிக்கலை சந்திக்கும். இந்த பகுதியில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் 16 சதவீத வாக்குகளை குறைவாகவே பெறும். அதேபோல் தெற்கு குஜராத்திலும் பா.ஜ.க முழு அளவில் வாக்குகள் பெறும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து