முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் அருகே பள்ளி மாணவர்கள் பாண்டியர், சோழர் கால காசுகள் கண்டெடுப்பு.

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் பாண்டியர்,சோழர் காலத்தை சேர்ந்த செப்பு காசுகளை கண்டெடுத்து நேற்றுக்கு முன் தினம் ஆவணப்படுத்தியுள்ளனர்.

 ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்கால பொருட்கள், காசுகள், வரலாற்றுச்சுவடுகள் ஆகியவற்றை விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி ஆவணப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த “கச்சி வழங்கும் பெருமாள்” காசு, ராஜராஜசோழன் பெயர் பொரித்த ஈழக்காசுகள் ஆகியவற்றை இந்த மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். இவை அனைத்தும் செப்புக்காசுகள் ஆகும். இதனையடுத்து மாணவர்களின் திறமை  கண்டு வியப்படைந்த அப்பகுதி பொதுமக்களும்,சமூக ஆர்வாளர்களும் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களும்,ஆசிரியைகளும்,பள்ளி மாணவர்களும் மாணவர்களை பாரட்டி வருகின்றனர்.

இதுபற்றி இப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு செய்தியாளர் சந்திப்பில்  தெரிவித்தது.

ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன. மாணவர்கள் கண்டெடுத்த இந்த காசுகள், இப்பகுதியின் வரலாற்றை தெரிந்துகொள்ள உதவுகிறது. திருப்புல்லாணி இந்திரா நகரை சேர்ந்த சமயமுத்து என்ற மாணவன் கடந்த ஆண்டு இந்த ஊரில் கண்டெடுத்த ஒரு காசு அடையாளம் காணமுடியாத அளவில் இருந்தது.தற்போது அதை சுத்தம் செய்து பார்த்தபோது அது பாண்டியர் காலத்தை சேர்ந்த காசு என தெரிய வந்துள்ளது. இதன் ஒரு பக்கத்தில் “கச்சி வழங்கும் பெருமாள்” என நான்கு வரிகளில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. மறுபக்கம் இரு மீன்கள் ஒன்றன்மேல் ஒன்று சாய்ந்த நிலையில் பெருக்கல் குறி வடிவில் உள்ளன. இரு மீன்களின் தலைக்கு நடுவில் பிறை உள்ளது.இந்த காசு கி.பி.1250 முதல் 1284 வரை பாண்டிய நாட்டை ஆண்ட முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் வெளியிடப்பட்டது. இவன் சோழநாட்டை சேர்ந்த கச்சி எனப்படும் காஞ்சீபுரத்தை போரில் வென்று மீண்டும் சோழ இளவரசனிடமே கொடுத்ததால் “கச்சி வழங்கும் பெருமாள்” எனும் பெயர் பெற்றான். மேலும் சுந்தரபாண்டியன், எல்லாந்தலையனான் ஆகிய பெயர்களிலும் இந்த மன்னன் காசுகளை வெளியிட்டுள்ளான். பாண்டிய நாட்டை பேரரசு அந்தஸ்துக்கு உயர்த்திய இம்மன்னனின் கி.பி.1262–ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் கோவில் முதல் கோபுர வாயிலின் வலது பக்கச்சுவரில் உள்ளது. இந்த காசு இங்கு கிடைத்துள்ளதன் மூலம் இப்பகுதியில் அது பயன்பாட்டில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.இதேபோல பஞ்சந்தாங்கியை சேர்ந்த ராஜ்குமார் என்ற மாணவனும், தாதனேந்தல் கிராமத்தை சேர்ந்த சினேகா என்ற மாணவியும் ஈழக்காசுகளை அவர்கள் ஊர்களில் கண்டெடுத்துள்ளனர். இந்த காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, நான்கு பந்துகள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. திரிசூலம், விளக்கும் உள்ளன. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். தேவநாகரி மொழியில் “ஸ்ரீராஜ ராஜ” என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை போல உள்ளான்.இலங்கையை சோழர்கள் வென்றபின் அந்நாட்டின் புழக்கத்துக்காக வெளியிடப்பட்ட ஈழக்காசு, முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த காசுகள் பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் பெரியபட்டினம், களிமண்குண்டு ஆகிய ஊர்களில் நடத்திய அகழாய்வுகளில் இக்காசுகள் கிடைத்துள்ளன. தற்போது திருப்புல்லாணி பகுதிகளிலும் இக்காசுகள் கிடைத்துள்ளதன் மூலம் இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட ஈழக்காசுகள் சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டு பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து