பிலிப்பைன்ஸ் ஆசியான் மாநாட்டு அறிக்கையில் தென் சீனக் கடல் விவகாரம் இடம் பெறவில்லை

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      உலகம்
south china sea 2017 11 13

மணிலா, ஆசியான் அமைப்பின் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று  தொடங்கியது. இதில் வெளியிடப்படவுள்ள வரைவு அறிக்கையில் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்றுள்ள நிலையில் தென் சீனக் கடல் விவகாரம் இடம் பெறவில்லை.

தென் கிழக்கு ஆசிய நாடுகள் இணைந்துள்ள ஆசியான் அமைப்பின் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கியது. இதனுடன் ஆசியான் அமைப்பின் 50-ம் ஆண்டு விழா, கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆசியான் நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே பேசியதாவது:


''இந்த மாநாட்டில் தீவிரவாதம், கடல் கொள்ளை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க உள்ளோம். தீவிரவாதம் இன்று உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. ஆசியான் அமைப்பில் இணைந்துள்ள நாடுகளும் தீவிரவாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க ஆசியான் அமைப்பின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்'' எனக் கூறினார்.

இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன பிரதமர் லீ கெ கியாங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் தலைவர்கள் விவாதித்து வெளியிடுவதற்காக வரைவு கூட்டறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளிடையே பாதுகாப்பு, வர்த்தகம், தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளன. அதுபோலவே ரோஹிங்யா முஸ்லிம்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை குறித்தும் வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

தென் சீனக் கடல் பிரச்சினை பற்றி இந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தென் சீனக் கடல் பகுதியில் உள்ள சிறிய தீவுகளை, சீனா ஆக்கிரமித்து வருவதாக பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் புகார் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக ஐ.நா கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை கிளப்ப சீனா எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதால் அதை விடுத்து மற்ற பிரச்சினைகள் மட்டும் கூட்டறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து