புலிகளுடன் நடந்த இறுதி யுத்தத்தில் போர்க்குற்றம் நடந்தது உண்மைதான்: சிறிசேனா ஒப்புதல்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      உலகம்
Sirisena 2017 1 7

கொழும்பு,  விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது சில அரசியல்வாதிகளின் கட்டளையை ஏற்று இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்றும், இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஒப்புக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பல்வேறு போர் விதிமீறல்கள் அரங்கேறின. இதில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். ஐநா மனித உரிமைகள் புள்ளி விவரபப்டி சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறது. மேலும் போரின் போது அப்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்சே அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது.

சிறிசேனா ஒப்புதல்


 இந்நிலையில், இறுதி கட்ட போரின் போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது என்று அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவே ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக சிறிசேனா கூறுகையில் "இறுதிக்கட்டப்போரின்போது அரசியல்வாதிகள் கட்டளையை ஏற்று செயல்பட்ட சில ராணுவ வீரர்கள் போர் விதிமீறல்களை செய்தது உண்மை தான். இது முற்றிலும் சட்டவிரோதமானது, ஜனநாயகத்திற்கும் மக்கள் சுதந்திரத்திற்கும் எதிரானது" என்றும் கூறியுள்ளார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த போர் விதிமீறல்கள் தொடர்பாகவும் அரசியல் தலைவர்களின் கட்டளைகளை ஏற்று செயல்பட்டவர்கள் சிலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டவர்கள் மீது குற்றம் இல்லையென்றால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் போர் விதிமீறல் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

போரில் நாட்டுக்காக போராடியவர்களை ஆளும் கட்சி வேட்டையாடி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இது முற்றிலும் தவறானது. ராணுவம் தன் மீதுள்ள கறையை அகற்ற வேண்டிய நேரம் இது அதைத்தான் எனது அரசு செய்து வருகிறது என்றும் சிறிசேனா விளக்கம் அளித்திருக்கிறார்.
ராஜபக்சேவின் ஆட்சி இலங்கையில் முடிவுக்கு வந்த பிறகு இறுதிப் போரின் போதுநடைபெற்ற ம்னித உரிமை மீறல்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தன்னுடைய கட்டளையை ஏற்று செயல்பட்டதால் ராஜபக்சே ஆட்சியின் போது போர் வீரர்களுக்கு சட்டச்சிக்கல்கள் இருந்ததில்லை, ஐநாவின் விசாரணைக்காக இவர்கள் அழைக்கப்பட்ட போதும் கூட இலங்கையின் ஒற்றுமைக்காக இதனை செய்ததாக ராணுவ வீரர்கள் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து