நீட் உள்பட போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்: சென்னையில் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      தமிழகம்
cm exam 2017 11 13

சென்னை, நீட் உள்பட போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக 100 பயிற்சி மையங்களில் தொடங்கும் வகுப்புகள், வெகுவிரைவில் 400 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் எம்.ஜி.ஆர் நகர். அம்பத்தூர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புரிந்துணர்வு ஒப்பந்தம்

தகுதி நுழைவு போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எவ்வித தயக்கமும், தளர்வும் இல்லாமல் உறுதியான எண்ணத்தோடு எதிர்கொள்ளும் வகையில் அரசு எடுத்த முடிவின்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையும், ஸ்பீடு அறக்கட்டளையும் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது இன்று செயல் வடிவம் பெறுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர் இதுவரை இப்பயிற்சிக்காக இணையதளம் வாயிலாக 73 ஆயிரம் மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

412 மையங்கள் பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் இத்திட்டமானது இவ்வாண்டு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்பயிற்சி மையத்தினை, ஒன்றியத்திற்கு ஒரு மையம் என்ற வீதத்தில் தமிழ்நாட்டில் மொத்தமாக 412 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்றைய தினத்தில் முதல் கட்டமாக 100 மையங்களில் இப்பயிற்சி தொடங்கப்படுகிறது. மிக விரைவில் மீதமுள்ள 312 மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாணவர்களிடமிருந்து எவ்வித கட்டணத்தையும் பெறாமல் பிளஸ் 2 வகுப்புக்கு பின் தொழில்சார் பட்டப் படிப்புகளில் சேரவிருப்பம் உள்ள மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தினந்தோறும் வகுப்பு

மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் பாடப் பொருளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அவர்களை பயிற்று மொழியிலேயே மிகச் சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு இப்பாடங்கள் நடத்தப்படும். இதற்கான பாடப் பகுதிகள் மாணவர்களுக்கு 30 புத்தகங்களாக வழங்கப்படும். பள்ளிகளில் பெறும் கல்விச் செயல்பாடுகளில் எவ்விதத் தேக்கமும் அடையா வண்ணம், மாணவர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், பொதுத் தேர்வு முடிவடைந்த பிறகு தினந்தோறும் இதே நேரத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சரியான முறையில் பயிற்சி

இப்புத்தகத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் கொள்குறி வகை வினாக்களும் மற்றும் அதன் பாடப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் அனைத்திந்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி நிறையவே எழுந்து கொண்டிருக்கின்றன. நான் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லுவேன். தற்பொழுது உள்ள நம் மாநில பாடத் திட்டம் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பாடத் திட்டத்திற்கும் சளைத்தது அல்ல. அத்தகைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நம் மாணவர்களுக்கு சரியான முறையில் பயிற்சி அளிப்பதே தற்போதைய தேவையாகும்.

எந்த பயிற்சியும் தேவையில்லை

அம்மாவின் அரசு அதற்கான அடித்தளத்தை மாணவர்களுக்கு அமைத்துக் கொடுக்கிறது. முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால் முன்னேறுவது உறுதி என்பதால்தான் இன்றைய தினம் முறையான பயிற்சியை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை  நாம் முன்னெடுத்து இருக்கிறோம். மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இப்பயிற்சி கட்டணமின்றி வழங்கப்பட உள்ளதால், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேறு எந்தப் பயிற்சியும் எடுத்துக் கொள்ள தேவையும் இல்லை. அதற்கென வேறு எந்த  செலவினமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மாணவா்களாகிய நீங்கள் எந்த நேரத்திலும் ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்பொழுது? யாரால்? என்ற கேள்விகளை உங்களுக்கு துணையாக அழைத்துச் செல்லுங்கள். உங்களை சறுக்கி விழாமல் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக அவை செயல்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இலக்கினை நோக்கிய பயணம் எத்தகையது என்பது முக்கியமல்ல. நீ, உன் இலக்கினை நோக்கி, இடையூறுகளை தகர்த்து எப்படி முன்னேறிக் கொண்டிருக்கிறாய் என்பதே முக்கியம். அரசும், அதன் அங்கமாகிய ஆசிரியர்களாகிய உங்களுக்கு நல்ல பாதையை மட்டுமே காட்ட முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எங்ஙனம், எவ்வளவு தூரம் செல்ல முடியுமென முடிவு செய்து முன்னேற உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆகவே தான் முயலுக்கும் ஆமைக்குமான போட்டியில் முயலும் வெல்லலாம், ஆமையும் வெல்லலாம். ஆனால் ஒருபோதும் முயலாமை வெல்லாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு செயலை தொடங்கும் போதே, என்னால் முடியாது என நினைத்து தொடங்காதீர்கள் என்னால் முடியாவிட்டால் இவ்வுலுகில் வேறு யாரால் முடியும் என்ற எண்ணத்தில் செயலைத் தொடங்குங்கள். வெற்றி நிச்சயம். “மாற்றத்திற்கான தொடக்கமே முன்னேற்றத்திற்கான அடையாளம்” என்பார்கள் ஆழ உழாத நிலமும், ஆழ்ந்து படிக்காத மனமும் ஆக்கம் பெறுவதில்லை. ஆகவே எதையும் ஆழ்ந்து படிக்க கற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறான ஆழ்ந்த கற்றலில் புரியாததை புரிந்து கொள்ளுங்கள். புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை.

வைராக்கியத்தோடு செயல்படுங்கள்

ஆகவேதான் முயற்சியை பற்றி கூறும் போது தெய்வப்புலவா திருவள்ளுவா, “அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்” அதாவது எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போது, இதை நம்மால் செய்ய இயலாது என்று மனத்தளர்ச்சி அடைந்து சோர்வு கொள்ளல் ஆகாது. என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற மன வைராக்கியத்தோடு செயல்படுங்கள். மூச்சு விடுபவன் - மனிதன் மூச்சை அடக்குபவன் - ஞானி, மூச்சே போகும் என்றாலும் முயற்சியை கைவிடாதவன் தான் - மாமனிதன்”அத்தகைய மாமனிதனே உலகை வெல்லப் பிறந்தவன்.  முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற கூற்றிற்கிணங்க, உங்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணா்ந்து, தமிழ்நாடு அரசால் அளிக்கப்படும் இந்தப் பயிற்சியின் துணை கொண்டு, எதிர்வரும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று, நீங்களும் உயர்ந்து, நம் தமிழ் சமுதாயத்தையும் உயர்த்திட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து