போட்டித் தேர்வுகான கேள்விகளை எதிர்கொள்வது எப்படி? குரு - சிஷ்யன் கதை கூறி முதல்வர் எடப்பாடி விளக்கம்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      தமிழகம்
C M Edappadi Exam  story 2017 11 13

சென்னை, போட்டித்தேர்வுக்கான கேள்விகளை எதிர்கொள்வது எப்படி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குரு - சிஷ்யர்கள் குறித்த குட்டிக்கதை கூறி விளக்கினார்.

இது குறித்து சென்னையில் நடைபெற்ற போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து, கையேடு ஒன்றை வெளியிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய கதை வருமாறு:-

தேர்வுகளுக்கு உள்ள வேறுபாடு


ஆண்டு பொதுத் தேர்வுக்கும் மாணவர்கள் கடினம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போட்டி தேர்வுகளுக்கும் அப்படி என்னதான் வேறுபாடு என எண்ணிப் பார்த்த பொழுது, எனக்கு ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஊரில் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்த குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மூன்று மாணவர்கள், அக்குருவிடம் சீடர்களாக சேர வருகிறார்கள்.  குருவினை வணங்கி, தங்கள் விருப்பத்தினை அவரிடம் தெரிவிக்கின்றனர். பொறுமையாக அவர்கள் கூறுவதை கேட்ட குரு, அவர்களிடம், நாளை வாருங்கள் பார்க்கலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைக்கிறார்.

முதல் மாணவன்...

பின், அவர் தன் மனைவியிடம், நாளை அந்த மாணவர்கள் வரும்போது,  “நேற்று இரவு குரு உறங்கி கொண்டிருந்த போது அவர் காதில் ஓணான் ஒன்று புகுந்து கடித்ததால், குரு இறந்து விட்டார் என்று தெருவிக்குமாறு கூறுனார். அடுத்த நாள், அவர்களில் முதலாவதாக வந்த மாணவனிடம் குருவின் மனைவி, குரு சொன்னதை அப்படியே சொல்கிறார். அதைக் கேட்ட அம்மாணவன், “ஓ! அப்படியா, அவரின் ஜாதகப்படி இம்மாதத்தில் அவருக்கு ஒரு கண்டம் இருந்தது. அதனால்தான் அவர் இறந்து இருப்பார் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு  திரும்பிச் சென்று விடுகிறான்.

2-வது மாணவன்...

சிறிது நேரத்தில் அங்கு வந்த இரண்டாம் மாணவனிடமும் குருவின் மனைவி அதே  செய்தியை கூறுகிறார். இரண்டாம் மாணவரும், “ஓ! குரு இறந்து விட்டாரா,  அவரிடம் கல்வி கற்க ஆவலுடன் இருந்தேன். சரி வேறு ஒரு குருவினைத் தேடி அவரிடம் கல்வி கற்றுக் கொள்கிறேன்”, என்று கூறி திரும்பிச் சென்று விடுகிறார். மூன்றாம் மாணவனிடமும், அதே செய்தியை குருவின் மனைவி சொன்ன போது, அம்மாணவன் சற்று யோசித்துவிட்டு, “மன்னிக்கவும், தாங்கள் பொய் சொல்வதாக நினைக்கிறேன். குரு இறப்பதற்கான வாய்ப்பில்லை”, என்று கூறுகிறான்.

ஏற்றுக் கொள்கிறேன்

மறைவிலிருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த குரு, “ஆஹா, நீயே சரியான மாணவன் ! உன்னை நான் என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன்”, என்றார். குருவின் மனைவி ஆச்சரியத்துடன், அந்த மாணவனைப் பார்த்து, “குரு இறக்கவில்லை என்பதை நீ எவ்வாறு அறிந்தாய்?” எனக் கேட்கிறார். அதற்கு அந்த மாணவன், “தாயே, தங்கள் கணவர் இறந்ததாக தாங்கள் கூறிய போது உங்கள் முகத்தில் எந்தவிதமான துக்கத்தின் சாயலையும் நான் பார்க்கவில்லை. மேலும் ஒரு மனிதனின் காதில் ஓணான் நுழைவதற்கு வாய்ப்பில்லை. அப்படியே நுழைந்து கடித்தாலும் அதனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் வராது என்பதாலேயே, குரு இறக்கவில்லை என்று நான், உறுதியாகக் கூறினேன்”, என்றான்.

பகுத்தாய்ந்து அறிதல்

மாணவச் செல்வங்களே, இக்கதையில் வரும் முதல் மாணவன் தன் மதியை நம்பாமல், விதியை நம்பி சென்று விடுகிறான். இரண்டாம் மாணவன், தான் கேட்ட செய்தியின் உண்மைத் தன்மையை அறியாமல், குருவின் மனைவி சொன்னதே உண்மை என்று எண்ணி, குரு இறந்து விட்டார். இனி என்ன செய்வது?  என்ற கேள்விக்கு இறந்த மனிதரிடம் சீடராக சேர முடியாது. ஆகவே வேறு  குருவை தேடிக் கொள்வோம் என்ற யதார்த்த் சிந்தனையுடன் சென்று விடுகிறார். மூன்றாம் மாணவரிடம், அதே கேள்வி கேட்கப்பட்டபோது உடனே  அம்மாணவன், அச்செய்தியில் உள்ள உண்மைத் தன்மையை அறிய, ஏன்? எதற்கு? எங்கே? எப்படி? எப்பொழுது? யாரால்? என்ற கேள்விகளின் துணை கொண்டு பகுத்தாய்ந்து, குரு இறக்கவில்லை, இறக்க வாய்ப்பில்லை என்ற உறுதியான நிலைபாட்டினை எடுக்கிறார். இத்தகைய சிந்தனையே போட்டித் தேர்வுகளுக்கான கேள்விகளை எதிர்கொள்ள தேவையானதாகும்.

இவ்வாறு அவர் அந்த குட்டிக்கதையை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து