ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறை: குற்றச்சாட்டுக்கு மியான்மர் ராணுவம் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      உலகம்
vanmurai1 2017 11 14

மியான்மர்: ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை என்ற குற்றச்சாட்டுக்கு மியான்மர் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில், மியான்மர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மர் அரசு ராணுவ நடவடிக்கையில் இறங்கியது.

இதில் போராட்டக்காரர்கள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர்.

மியான்மர் அரசின் இந்த ராணுவ அடக்குமுறைகளை ஐ. நா சபை உள்ளிட்ட பல உலக நாடுகள் கண்டித்தன. மியான்மரில் நடக்கு வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டு தலைவர் ஆங் சான் சூகிதொடர்ந்து மவுனம் காத்து வருவதாக உலக நாடுகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.


தொடர் விமர்சனங்களுக்குப் பிறகு, மியான்மரில் வன்முறை குறித்து சூகி, 'மியான்மர் நெருக்கடி குறித்து தவறாக புகைப்படங்கள், தவறான தகவல்கள் பரப்படுகின்றன' என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்குப் பிறகு கலவரம் ஏற்பட்ட பகுதிகளை சூகி பார்வையிட்டார்.

இந்த நிலையில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை என்ற குற்றச்சாட்டுக்கு மியான்மர் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மியான்மர் ராணுவம் தரப்பில் கூறியப்பட்டதாவது , 'கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரின் ராக்கைன் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 376 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு போன்ற எந்த வன்முறையிலும் ராணுவம் ஈடுபடவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், மியான்மர் ராணுவத்தின் விளக்கம் அங்கு நடைபெறும் ராணுவ அட்டூழியங்களுக்கு முரணாக உள்ளது என்றும், அங்கு நடைபெறும் உண்மைகளை அறிய சர்வதேச விசாரணை தேவை என்றும் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து