முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் - ஈராக் எல்லையில் நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

பாக்தாத்: ஈரான் - ஈராக் எல்லையில் நேற்றுமுன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்  பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்தது. மேலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஈரான் - ஈராக் எல்லையோரம் ஹலாப்ஜா என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் இரு நாட்டு எல்லையோரம் உள்ள பல கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகும் நில அதிர்வுகள் நேற்று காலை வரை தொடர்ந்து கொண்டே இருந்தன. இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியபோது, ‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை நில அதிர்வுகள் தொடர்ந்தன. இராக்கின் வடக்கில் குர்திஸ் பகுதியில் உள்ள சுலைமானியா நகரின் தென்கிழக்குப் பகுதியில் ஹலாப்ஜா என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது’’ என்று உறுதிப்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு குவைத், துபாய், பாகிஸ்தான் பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஈரான் நாட்டின் சர்போர்-இ-சஹாப் நகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஈராக்கில் 7 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நிலநடுக்க பாதிப்பு உள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பகுதியில் அவசர நிலையை சுலைமானியா அதிகாரிகள் பிரகடனப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து