ஒருதலைக் காதலால் பெண் எரித்துகொலை: வாலிபர் வெறிச்செயல்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      தமிழகம்
akash 2017 11 14

சென்னை, சென்னை ஆதம்பாக்கத்தில் ஒருதலைக் காதலால் பெண் எரித்துகொலை  செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கு மகள்கள் இந்துஜா,23 நிவேதா, 21. மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் கனடாவில் வேலை செய்து வருகிறார். திங்கட்கிழமையன்று நள்ளிரவில் இவரது வீட்டில் பலத்த சப்தமும் கூக்குரலும் கேட்டது. அப்போது அங்கே ஒரு வாலிபர் கையில் மஞ்சள் கலர் கேனுடன் நின்று கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

அந்த நபர் தான் ஆகாஷ், அவர் இந்துஜாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தன்னை காதலிக்க மறுத்த இந்துஜாவை குடும்பத்தோடு கொலை செய்யும் திட்டத்தோடு கையில் பெட்ரோலுடன் வந்து வாக்கு வாதம் செய்தார். ரேணுகா மறுத்து பேசி திட்டவே, கையில் இருந்த பெட்ரோலை வீடு முழுவதும் ஊற்றியதோடு ரேணுகா, இந்துஜா, நிவேதா மீதும் ஊற்றி லைட்டரை பயன்படுத்தி தீ வைத்துள்ளார்.


கருகிய பெண்கள் :

இந்த காட்சியை பார்த்த அக்கம் பக்கத்தார் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தீயை அணைக்க முயற்சி செய்த போது பலருக்கும் தீ காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தீயணைப்புத்துறைக்கும், ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்தனர். அலறிய பெண்கள் சிலர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது வீட்டுக்குள் தீக்காயத்துடன் ரேணுகா, இந்துஜா, நிவேதா ஆகியோர் முழுவதுமாக கருகிக் கொண்டிருந்தனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது.

இந்துஜா மரணம் :

இந்துஜா சிறிது நேரத்தில் கருகிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தார். காயத்துடன் கிடந்த மற்ற இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ காயங்களுடன் சிகிச்சை தாய் ரேணுகாவும், சகோதரி நிவேதாவும் பலத்த தீ காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

வேலையில்லாத ஆகாஷ் :

காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உறவினர்கள் சில தகவல்களை கூறியுள்ளனர். வேளச்சேரியில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் இந்துஜா. அதே பகுதியில் வேலையில்லாமல் சுற்றித்திரியும் ஆகாஷ் என்ற வாலிபருடன் நட்பாக பழகியதும் தெரியவந்தது. இருவரும் பள்ளி கால நண்பர்கள் என தெரியவந்துள்ளது.

தொல்லை கொடுத்த ஆகாஷ் :

இந்துஜாவை ஆகாஷ் காதலித்துள்ளார். ஆனால் அந்த காதலை ஏற்க இந்துஜா மறுத்து விட்டார். ஆகாஷ் உடனான நட்பையும் துண்டித்து விட்டாராம். இதனால் இந்துஜா வேலைக்குச் செல்லும்போது ஆகாஷ் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார்.

வேலையை விட்ட இந்துஜா :

இந்துஜாவை வேலையை விட்டு நிறுத்தி விட்டார் ரேணுகா. இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் நேற்று இந்துஜாவை கொலை செய்யும் நோக்கத்துடன் கையில் பெட்ரோல் கேனுடன் இந்துஜா வீட்டுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மூவரையும் தீ வைத்து எரித்துள்ளார் ஆகாஷ்.

ஆகாஷிடம் விசாரணை :

தீவைத்த பின்னர் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ஆகாஷை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என தெரிகிறது. காதலிக்க மறுத்தார் என்பதற்காக குடும்பத்தோடு தீ வைத்து எரித்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து