தமிழகத்தில் மட்டுமே அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மானியத்துடன் சர்க்கரை வழங்கப்படுகிறது: - டிசம்பர் 15-க்குள் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணி நிறைவு அடையும் - தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      தமிழகம்
minister kamaraj 2017 11 14

சென்னை : இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் சர்க்கரை, மானியத்துடன் வழங்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். மேலும் வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குளறுபடி இல்லை


ரேஷன்கடைகளில் ஒரு கார்டுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்குவது உறுதி செய்யப்படும். தமி்ழ்நாட்டில் 1.94 கோடி ரேஷன்கார்டுகள் உள்ளன. மீதமுள்ள 23 லட்சம் கார்டுகளுக்கும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் குளறுபடி இல்லை. பெரிய திட்டம் என்பதால் சிறு, சிறு பிரச்னை வருவது இயல்பு. ஒரிரு நாட்களில் அந்த பிரச்னை சரி செய்யப்படும். தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து கார்டுகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றம் புகைப்பட திருத்தம் போன்ற தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டியில் ஒரு கடையில் 908 கார்டுகள் உள்ளன. அதில் 66 கார்டுகள் வழங்கப்பட்டதில் முகவரி, புகைப்படம் குறித்து சரிப்பார்க்காமல் கொடுத்துள்ளனர். இந்த புகார் குறித்து துணை கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் முகவரி , புகைப்பட மாற்றம் சரி செய்து வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதற்காக கார்டு தாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.

அனைவருக்கும் பருப்பு

ரேஷன்கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்குதற்கான பொருட்கள், மாதாமாதம் டெண்டர் விடப்பட்டு தேவைக்கு ஏற்ப வாங்கப்படுகிறது. விளைச்சல் அதிகம் உள்ளபோது கூடுதலாக வாங்குகிறோம். ரேஷனில் வழங்குவதற்காக 2008-ம் ஆண்டு முதல் 13 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பும் 7 ஆயிரம் மெட்ரிக் டன் உளுத்தம் பருப்பும் வாங்கப்பட்டன. இதில் சிலருக்கு உளுத்தம் பருப்பு வழங்கப்படவில்லை. ஒரு கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் 20-21 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய உள்ளோம். இதன் மூலம் அனைத்து கார்டுகளுக்கும் ஒரு கிலோ துவரம் பருப்பு மசூர் பருப்பு வழங்கப்படும்.மசூர் பருப்பு உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று எந்த ஆய்வும் கூறவில்லை.

தமிழகத்தில் மட்டும்.

புதிய குடும்ப அட்டை வழங்குவது தொடர்ந்த நடவடிக்கையாகும். அது தொடர்ந்து நடைபெறும், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு பணம் பெறுவதாக வெளியான செய்திகள் தவறானதாகும். பொதுவிநியோக திட்டத்திற்கு உணவு மானியத்தொகையாக ரூ.5600 கோடி வழங்கப்படுகிறது. சர்க்கரைக்கு மட்டும் தற்போது ரூ.836 கோடிக்கு வழங்குகிறோம். வெளிச்சந்தையில் ரூ.45-க்கு ஒரு கிலோ சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு ரேஷனில் அனைத்துக் கார்டுகளுக்கும் ரூ.20 மானியமாக தரப்பட்டு, ரூ.25-க்கு விறபனை செய்யப்படுகிறது. மேலும் ஏழைகளின் 19 லட்சம் கார்டுகளுக்கு ரூ.13.50 விலையிலேயே சர்க்கரை வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலங்களிலும் பொது கார்டுகளுக்கும் ரேஷனில் சர்க்கரை வழங்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மானியத்துடன் சர்க்கரை வழங்கப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து