முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி : முதலிடத்தை தக்கவைக்குமா இந்திய அணி? கொல்கத்தாவில் இன்று ஆரம்பம்

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

கொல்கத்தா : இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைக்கும் நோக்கில் களமிறங்கவுள்ளனர்.

வீரர்கள் பயிற்சி

சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கடந்த 2 தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர் வெற்றி

விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. இலங்கையை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கிலும், தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கிலும், வெஸ்ட்இண்டீசை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்காளதேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) மற்றும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கிலும் தொடர்ச்சியாக வென்றது.

அணியில் முரளிவிஜய்...

தற்போது இலங்கையை 3-வது முறையாக வீழ்த்தி தொடர்ச்சியாக 9-வது டெஸ்ட் தொடரை வெல்லும் வேட்கையில் இந்திய அணி உள்ளது. காயம் காரணமாக இலங்கை தொடரில் விளையாடாத முரளி விஜய் அணிக்கு திரும்பி இருக்கிறார். தவானுடன் இணைந்து அவர் தொடக்க வீரராக ஆடுகிறார். இதனால் 11 பேர் கொண்ட அணியில் லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு இல்லை.

அஸ்வின் - ஜடேஜா ...

அதற்கு அடுத்த வரிசையில் புஜாரா, கேப்டன் விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா உள்ளனர். பாண்டியா இல்லாததால் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீரர்களான இருவரும் சொந்த மண்ணில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட இருவரும் டெஸ்டில் தங்களது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, புவனேஷ்வர்குமார், இஷாந்த் சர்மா உள்ளனர். இதில் இருவருக்குத்தான் அணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

கடுமையாக போராடும்

இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர் கொள்கிறது. இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்டில் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராடும். சொந்த மண்ணில் ஏற்பட்ட முழுமையான தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. அந்த அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர்.

மழை அச்சுறுத்தல்

இன்றைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக இந்திய வீரர்கள் மாலை நேர பயிற்சியை கைவிட்டுள்ளனர். கொல்கத்தாவில் இன்னும் 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்திய வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், தவான், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ராகுல்.

இலங்கை வீரர்கள்:

சன்டிமால் (கேப்டன்), கருணாரத்னே, சமரவிக்ரமசிங்கே, மேத்யூஸ், டிக்வெலா, திரிமானே, ஹெராத், தகன் ‌ஷன்கா, விஷ்வா பெர்னாண்டோ, ரோகன் சில்வா, லக்மல், தில்ருவன் பெனரரா, லகிரு கமாகே, சன்டகன், தனஞ்செயன் சில்வா.

இலங்கை அணி இந்திய மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் போட்டியில் வென்றதில்லை. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைக்கும் நோக்கில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணி கடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. அந்த உத்வேகத்துடன் இலங்கையை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொந்த மண்ணில் அந்த அணியை ஓயிட் வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியை வென்ற இலங்கை அணி, ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் மோசமான தோல்வியை தழுவியது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்வது எங்கள் கனவு எனக் கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து