முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு தாயாக எனது நிலையை சோனியா உணர்வார் : கண்ணீருடன் அற்புதம்மாள் நம்பிக்கை

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஒரு தாயாக சோனியாகாந்தி எனது நிலையை உணர்ந்து கொள்வார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை முடிவடைந்த நிலையில் இன்னும் விடுவிக்கப்படாமல் சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலேயே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு 2 மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து பரோல் காலம் முடிவடைந்து பேரறிவாளன் சிறை சென்றுவிட்டார். இந்த நிலையில் தற்போது அந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் தற்போது கூறியுள்ள கருத்து அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அவர்தான் பேரறிவாளன் வாக்குமூலத்தை பதிவு செய்தவர். அந்த வாக்குமூலத்தில் 9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை ஒற்றைக் கண் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனால் எதற்காக அந்த 2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தேன் என்பதும் அது ராஜீவ் காந்தியை கொல்வதற்தாக என்பதும் தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆனால் பேரறிவாளன் சொன்ன, தனக்கு தெரியாது என்ற வார்த்தையை வாக்குமூலத்தின் எந்த பகுதியிலும் விசாரணை அதிகாரியாக இருந்த தியாகராஜன் குறிப்பிடவில்லை. இதனால் பேரறிவாளன் தண்டனைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் புதிய திருப்பமாக சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி தியாகராஜனே உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து அந்த உண்மையை மறைத்தது ஏன் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

அதே நேரத்தில் தன்னை இந்த தண்டனையிலிருந்து விடுவிக்கும்படி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பெஞ்சில் இருந்த நீதிபதி தாமஸ் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் குற்றவாளிகள் 7 பேரும் சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு 2014-இல் கொண்டு வந்த தீர்மானத்தை அப்போதைய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த வழக்கானது தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 
ஆயுள் தண்டனைக்கு மேல் சிறையில் நீண்ட காலமாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு நீங்களும், ராகுலும், முடிந்தால் பிரியங்காவும் கடிதம் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், "ஒரு தாயாக சோனியா காந்தி எனது உணர்வுகளை புரிந்து கொண்டு தனது மகனை விடுவிப்பார்" என்று நம்புவதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து