கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் மற்றும் நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில், ‘தற்கொலை தீர்வல்ல’ எனும் கருப்பொருளில் பொதுமக்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழிப்புணர்வு கருத்தரங்கு
நிகழ்ச்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அழகியநம்பி மற்றும் பொதுச்செயலாளர் மிதார் மைதீன் தலைமை வகித்தனர். நெல்லை மாவட்டத் தலைவர் கே.எம்.கே இசக்கிராஜன் வரவேற்றார். மனநல மருத்துவர் பன்னீர்செல்வம் மற்றும் மனநல ஆலோசகர் ஜெயபிரகாஷ் ஆலோசனைகள் வழங்கினர். தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ‘’முதலில் கந்துவட்டி என்றால் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். கடன் இருவகை உண்டு. ஒன்று ஈடுள்ள கடன், மற்றொன்று ஈடில்லா கடன். நகையோ, நிலத்தையோ வைத்து கடன் பெறுவது ஈடுள்ள கடன். ஆண்டுக்கு 9 சதவீதம், அதாவது மாதமொன்றுக்கு 100 ரூபாய்க்கு 75 பைசா மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும். எதையும் அடமானம் வைக்காமல் கடன் பெறுவது ஈடில்லா கடன். ஆண்டுக்கு 12 சதவீதம், அதாவது மாதமொன்றுக்கு 100 ரூபாய்க்கு ஒரு ரூபாய் வட்டி வசூலிக்க வேண்டும். இதற்கு மேல் அதிகமாக வட்டி கேட்டாலோ, தொந்தரவு கொடுத்தாலோ அதற்கு பெயர்தான் கந்துவட்டி. வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மேலே கூறிய அளவுக்கு மேல் வட்டி கேட்டால் நீதிமன்றத்தை அணுகி அரசு நிர்ணயித்திருக்கிற வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். கந்துவட்டி புகார்கள் அளிக்க காவல்துறை மற்றும் ஆட்சியர் அலுவலகம் சார்பில் பிரத்யேக தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்’’ என்று பேசினார். பொதுமக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். அவரைத் தொடர்ந்து தென்காசி டிஎஸ்பி மணிகண்டன் பேசினார். நிறைவாக, த.ப.பா.ந.ச மாநில பொருளாளர் கார்த்தி நன்றி கூறினர். நிகழ்ச்சியினை மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகேஷ் தொகுத்து வழங்கினார். மாநில கெளரவத் தலைவர் கனியத்தா, மாநில துணைச் செயலாளர் முத்துக்குமாரசாமி, இணைச் செயலாளர் சிவஹரி சங்கர், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், பிரகாஷ், முத்துப்பாண்டி, தளவாய், முருகேஷ், சின்னத்துரை மற்றும் சங்க உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கருத்தரங்கில் கலந்துக் கொண்டனர்.