முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் மீட்டர் கொள்முதல் விவகாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு மறுப்பு

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியம் மின் மீட்டரை குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கிறது என்று ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மின் மீட்டர் கொள்முதல் செய்ததில் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என மின்வாரியமும் விளக்கம் அளித்துள்ளது.

மின்மீட்டர் கொள்முதல் குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். மின்மீட்டர் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஸ்டாலின் எழுப்பியுள்ள புகார்களுக்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்து நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம் வருமாறு:-

ஒப்பந்தப்புள்ளி முடியவில்லை

மின்மீட்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளியே இன்னும் முடியவில்லை. அதற்குள் ஊழல் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை வழங்குகிறார். யார் பெயருக்கு கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி கொடுக்கப்பட்டது என்று ஸ்டாலின் சொல்ல தயாரா? தொழிற்நுட்ப காரணங்களுக்காக ஒரு கம்பெனியின் டெண்டர் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த குறிப்பிட்ட கம்பெனி நி்ர்வாகத்தினரே அதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.

ஒப்பந்தப்புள்ளியில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. நேர்மையாக ஒப்பந்தப்புள்ளிகள் நடந்து வருகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் தவறான தகவல்களை வழங்குகிறார். 2006 ஆம் ஆண்டு முதல் 35 ஆயிரம் கோடி கூடுதல் கடனில் தள்ளியவர்கள் திமுகவினர். மின்வெட்டு இருட்டில் தள்ளிய தி.மு.க. ஆட்சிக்கு விடை கொடுத்ததோடு மட்டுமில்லாமல், உபரி மின்சார உற்பத்திக்கு வித்திட்டார்.
தவறான தகவல்களை கூறுகிறார்

தி.மு.க. ஆட்சியில் இருந்த கடனில் பெரும்பகுதியை குறைத்து சாதனை படைத்தார் முதல்வர் ஜெயலலிதா. இப்படியிருக்க எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை கூறி மக்களை பீதியில் ஆழ்த்துகிறார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

பகிர்மானக்கழகம் விளக்கம்

இந்நிலையில், மின் மீட்டர் கொள்முதல் குறித்து ஒப்பந்த புள்ளிகள் வழங்கியவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் மின்வாரியத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தெரிவித்திருப்பதாவது:-

கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்தின் ஒருதலைபட்சமான குற்றசாட்டின் அடிப்படையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒருமுனை மின்மீட்டர் கொள்முதல் செய்ய கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் தகவல்கள் எதுவும் பெறப்படாமல் செய்திகள் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது.

அவப்பெயரை ஏற்படுத்த...
இந்த ஒப்பந்தப்புள்ளியில், விலைப்புள்ளி திறக்கப்பட்டு, விலை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலும் மற்றும் ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படாத நிலையிலும் கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரச்சாரம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளியின் உண்மை விவரம்

பின்வருமாறு:

மின்னணு ஒப்பந்தப்புள்ளி விவரக்குறிப்பேடு எண். 52/16-17-ல் 29.88 லட்சம் ஒருமுனை 5-20 ஆம்ஸ் நிலைத்த மின் அளவிகளை கொள்முதல் செய்ய கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொண்ட 13 ஒப்பந்தப்புள்ளிதாரர்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக விவரங்கள் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி திறக்கப்பட்டது. 13 ஒப்பந்தப்புள்ளிதாரர்களிடமிருந்து பெறப்பட்ட ஏலத்தகுதி, தொழில்நுட்ப மற்றும் வணிக தகுதி ஆவணங்கள் ஆராயப்பட்டது.

விலைப்புள்ளி திறக்கப்படவில்லை

ஒப்பந்தப்புள்ளியின் தொழில்நுட்ப தேவைகளின்படி ஒப்பந்தப்புள்ளிதாரர்கள் கொடுத்த மாதிரி மின் மீட்டர்கள் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யாவிடில் அவர்களின் ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கப்பட்டு விலைப்புள்ளி திறக்கப்படமாட்டாது. கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் மற்றும் இதர 5 நிறுவனங்கள் மின்வாரிய தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. எனவே, அவர்களின் ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கப்பட்டு விலைப்புள்ளி திறக்கப்படவில்லை. தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டவுடன்தான் அதன் தகவல் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

உண்மைக்கு புறம்பான செய்தி

113 ஒப்பந்தப்புள்ளிதாரர்களில் ஒப்பந்தப்புள்ளியின் அனைத்து தேவைகளை பூர்த்தி செய்த 7 நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் கடந்த 3-ம் தேதி திறக்கப்பட்டது. குறைந்த விலை சமர்ப்பித்த ஒப்பந்தப்புள்ளிதாரருடன் விலை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்த ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில் கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம் இந்த ஒப்பந்தப்புள்ளி ரூ.495-க்கு இறுதி செய்யப்பட்டதாகவும் அதனால் வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி விளம்பரப்படுத்துவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

இதற்கு முன்னர் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் மின்மிட்டர்கள் ரூ.453-க்கு கொள்முதல் செய்ய ஆணைகள் ஜீன் 2017-ல், அதாவது மூன்று மாதத்திற்கு முன்புதான் வழங்கப்பட்டதால் தற்போது கோரப்பட்டுள்ள ஒப்பந்தபுள்ளியில் குறைவான விலை சமர்ப்பித்த ஒப்பந்தப்புள்ளிதாரருடன் மேற்கண்ட விலைக்கு சமமாக குறைத்து கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இந்த ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்த ஒப்பந்தப்புள்ளி மேற்கண்ட விலை பெறாவிடில் இறுதி செய்யப்படமாட்டாது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து