விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரொக்க பரிசு

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      வேலூர்

 

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் காட்பாடி வட்டார வள மையம் சார்பில் காட்பாடி ஒன்றிய அளவிலான பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவசக்கட்டாய கல்வி உரிமை சட்டம் மற்றும் சுத்தம், சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேச்சு கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்றது.  வட்டார வள மைய மேற்பார்வையாளர் பி.சாமுண்டீஸ்வரி தலைமை தாங்கினார்.

காட்பாடி வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க   பள்ளிகளில் பயிலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டியும், 4 மற்றும 5 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டிகளும், அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளும் நடைபெற்றன.

மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு

ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரையிலான ஓவிய போட்டியில் என்.காவியா, டி.நதியா, ஜி.விக்னேஷ் ஆகியோர் பரிசு பெற்றனர். 6முதல் 8 வகுப்பு வரையிலான போட்டிகளில் எம்.அமுதசுரவி, பி.சுவேதா, ஜி.பாண்டுரெங்கன், ஆகியோர் பரிசு பெற்றனர்.  4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் டி.நரேஷ்,கே.டில்லிகணேஷ், எச்.பிரதீபா ஆகியோரும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வி.சின்கா, கே.திவ்யா, ஆர்கலையரசி, கட்டுரை போட்டியில் சி.நித்யா, ஜி.பிரித்தா, கே.பாரதி ஆகியோரும் பரிசு பெற்றனர். காட்பாடி ஒன்றிய உதவி தொடக்கல்வி அலுவலர் எம்.உதயசங்கர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசுகளை வழங்கினார்.  முதல் மூன்று பரிசுகளை வென்ற 15 மாணவ மாணவிகளுக்கு தலா ரூபாய் ஒரு ஆயிரம், எண்ணூறு, எழுநூறு வீதம் மற்றும் ஒரு ஆயிரத்து ஐநூறு, ஒரு ஆயிரத்து முன்னூறு, ஒரு ஆயிரத்து ஒரு நூறு வீதம் ஆக மொத்தம் ரூபாய் 16,800/-(பதினாராயிரத்து எண்ணூறு) ரொக்க பரிசாக ஒவ்வொரு மாணவருக்கும் அவர் அவர் பெயரில் கொணர்பவர் பணம் பெறும் காசோலையாக அளிக்கப்பட்டது.  போட்டிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் அவர்கள் பார்வையிட்டார்.

ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வாழ்த்தி பேசினார்.  வட்டார வள மைய பயிற்றுனர்கள் எஸ்.ஜெயசுதா, ஜி.லட்சுமி, ஆர்.ரமணி, எஸ்.பத்மாவதி, எ.அறிவழகன், தலைமையாசிரியர்கள் குப்புராமன், பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள் ஆர்.லோகநாதன், பி.இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.  முன்னதாக ஆசிரியர் பயிற்றுநர் எஸ்.ஜெயசுதா வரவேற்றார், முடிவில் எ.அறிவழகன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து