திருவாரூர் மாவட்டத்தில் 64- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ.3 கோடியே 18 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      திருவாரூர்
Thiruvarurr 2017 11 17

திருவாரூர் மாவட்ட நன்னிலம் வட்டம் ஆண்டிபந்தல் ஊராட்சியில் 64 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு ரூ.3 கோடியே 18 லட்;சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் முன்னிலை வகிக்க, மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமை வகித்தார்.

 கடனுதவி

உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசு ஏழை, எளிய சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது.விவசாயிகளின் பாதுகாவலராகவும் திகழ்ந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி,குடவாசல், நன்னிலத்தில் கல்லூரி வழங்கி மாணவ,மாணவிகளின் கல்லூரி படிப்புக்கு வழிகாட்டிய அரசு மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு. தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியீட்டு வெற்றி கண்டவர் முன்னாள் முதலமைச்சர் அம்மா ஆவர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பயிர்க்காப்பீட்டு தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்திட வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2016 – 2017 ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 286 விவசாயிகளுக்கு ரூ.163 கோடியே 29 லட்சம் குறுகிய கால பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நகைக்கடனாக 43 ஆயிரத்து 115 விவசாயிகளுக்கு 87 கோடியே 68 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் தொழில் முனைவோர் கடனாக 225 நபர்களுக்கு ரூ.54 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2017-2018 நிதியாண்டில் தற்போது வரை 27 ஆயிரத்து 254 விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.107 கோடியே 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகைக்கடனாக 25 ஆயிரத்து 540 விவசாயிகளுக்கு ரூ.56 கோடியே 19 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் தொழில் முனைவேர் கடனாக 51 நபர்களுக்கு ரூ.26 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுயஉதவிக்குழு கடன் , பண்ணைசாராக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன், சிறுவணிகக் கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 137 கூட்டுறவு கடன் சங்கங்களில் தமிழகத்திலேயே எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் 130 கூட்டுறவு கடன் சங்கங்கள் முழுவதுமாக கணினிமயமாக்கபட்டுள்ளது.

எனவே கூட்டுறவுத்துறையானது சாதாரண மக்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், வாழ்வில் பின் தங்கியுள்ளவர்களின் சமூக பொருளாதார நிலை மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது. இன்றையதினம் 948 நபர்களுக்கு 3 கோடியே 18 லட்சம் மதிப்பிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இக்கடனுதவிகளை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார். முன்னதாக கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி,கட்டுரைப் போட்டியில் , ஒவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சிறந்த முறையில் சேவையாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும் உணவுத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு சங்களின் துணைத்தலைவவரும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.ஆசைமணி, மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ரமணிதேவி, வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைத் தலைவர் ஆர்.கே.பி.விஸ்வநாதன், திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் அர்ச்சுணன், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய துணைத்தலைவர் சி.பி.ஜி.அன்பு, நன்னிலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமகுணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து