முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா அறையில் சோதனை நடக்கவில்லை: வருமானவரித்துறை சோதனைக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

மதுரை : வருமான வரித்துறை சோதனைக்கும், தமிழக அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், வருமான வரித்துறை மாநில அரசின் கட்டுபாட்டில் இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா அறையில் சோதனை நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.

முதல்வர் பேட்டி

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் எடப்பாடி எம்.ஜி.ஆர். திருவுருவ படத்தை திறந்து வைத்தார். பிறகு புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிறகு நலத்திட்ட உதவிகளையும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் வழங்கினார். சிவகங்கை மாவட்டத்திற்கான பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்தார். பிறகு சென்னை செல்லும் வழியில் மதுரை விமான நிலையம் வந்த அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கட்சிக்கு களங்கம்

அப்போது அவர் கூறியதாவது:-

போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை யாரால் நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். ஒரு சிலர் செய்த தவறால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. போயஸ் தோட்ட இல்லத்தில் அம்மாவின் ( ஜெயலலிதா) அறையில் சோதனை எதுவும் நடைபெறவில்லை. இந்த வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வருமான வரித்துறை எங்கள் கட்டுபாட்டில் இல்லை. வேதா இல்லம் எங்களது கோவில் அம்மா ( ஜெயலலிதா) வாழ்ந்த இடத்தை அரசு நினைவு சின்னமாக மாற்ற முயற்சிக்கிறோம். 1.5 கோடி அ.தி.மு.க. தொண்டர்களும் வேதனையில் இருக்கிறோம். இதற்கெல்லாம் யார் காரணம் என்பது உங்களுக்கே தெரியும். எதிர்கட்சிகள் பொய்யாக திட்டமிட்டு  பலசெய்திகளை சொல்லி வருகிறார்கள். அதில் உண்மை இல்லை.

தொடர்பு இல்லை

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் தன்னை தானே வேட்பாளராக அறிவித்து கொண்டார். டி.டி.வி.தினகரனுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக அவர் கட்சியிலேயே இல்லை. கடந்த 1974-ம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க. கட்சியில் பணியாற்றி வருகிறேன். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 6 முறை சிறைச்சாலைக்கு சென்றவன் நான். டி.டி.வி.தினகரன் எத்தனை முறை சிறை சென்றார். பத்திரிகையாளர்களாகிய நீங்கள் டி.டி.வி.தினகரனை பெரிய அரசியல் வாதியாக நினைத்து பேட்டிகள் எடுத்து பெரிது படுத்துகிறீர்கள். அம்மா தான் எனக்கு இந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை தந்தார்.

அறிந்து கொள்கிறார்

அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் 9 முறை போட்டியிட்டு வெற்றி, தோல்விகளை சந்தித்தவன் நான். படிப்படியாக உயர்ந்து இந்த பதவிக்கு வந்துள்ளேன். மறைந்த முதல்வர் அம்மாவால் கட்சியில் பலபதவிகளை வகித்தேன். என்னுடைய உழைப்பை அறிந்து அம்மா எனக்கு பலபதவிகளை கொடுத்தார். அப்படி படிப்படியாக உயர்ந்தவன் நான். கூவத்தூரில் ஒட்டுமொத்த அ.தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்தனர். ஆளுநர் ஆய்வு செய்தது தவறு என்கிறார்கள். அவர் ஆய்வு செய்தார் என்பதே தவறு. அரசின் நல்லதிட்டங்களை அவர் அறிந்து கொள்கிறார். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

பேட்டியின் போது அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். பின்னர் முதல்வர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து