முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் இடையிலான பயிற்சி ஆட்டம் டிரா

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

பிரிஸ்பேன் : இங்கிலாந்து - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மூன்று பயிற்சி ஆட்டங்களில் மோதியது. இரண்டு பயிற்சி ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், 3-வது பயிற்சி ஆட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கியது.

இதில் இங்கிலாந்து - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதின. டாஸ் வென்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அந்த அணி இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 250 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 515 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஸ்டோன்மேன் (111), 5-வது வீரராக களம் இறங்கிய மலன் (109) ஆகியோர் சதம் அடித்தனர். பின்னர் 265 ரன்கள் பின்தங்கிய நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய ஆஸதிரேலியா லெவன், 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3-வது நாள் ஆட்ட முடிவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. ஷார்ட் 8 ரன்னுடனும், சங்கா 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஷார்ட் மற்றும் சங்கா ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இவர்கள் விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. சங்கா 133 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஷார்ட்டும் சதம் அடித்தார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 110 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஷார்ட் 134 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது. 2-வது இன்னிங்சில் 110 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுக்கள் மட்டுமே எடுத்ததால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் விரக்தியடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து