முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூர்யாவுக்கு கார்த்தி கடும் போட்டியாக இருக்கிறார்: சென்னை மாநகர காவல் துணை ஆணையர் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழக காவல்துறையில் தீரன்களும் அவர்தம் சாதனைகளும் அதிகம். எனவே 'தீரன் அதிகாரம் இரண்டு'க்கு தமிழ்நாடு காத்திருக்கும் என்றும், சூர்யாவுக்கு கார்த்தி கடும் போட்டியாக இருக்கிறார் என்றும் சென்னை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் பாராட்டியுள்ளார்.

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் குறித்து சென்னை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் கூறுகையில், ''நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படத்தை அது வெளியாகும் தேதியன்றே பார்த்துவிட பல காரணங்கள் இருந்தன. முதலில் இது காவல்துறை அதிகாரிகளின் உண்மைக் கதை.

தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த குற்றத்தடுப்பு நடவடிக்கை பற்றிய படம். படத்தின் பல கதாபாத்திரங்கள் இன்று காவல் பணியாற்றி வரும் எனது நண்பர்கள். தமிழகத்தில் 1995 முதல் 2005 வரை நடைபெற்ற நெடுஞ்சாலை கொள்ளைகளை தமிழக காவல் துறையினர் பல்வேறு இன்னல்களுக்கிடையே துப்பு துலக்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயணம் செய்து கைது செய்வதே கதை.

ஒரு உண்மைக் கதையை ( பவேரியா கொள்ளை கூட்டத்தை டிஜிபி ஜாங்கிட் ஐபிஎஸ் தலைமையிலான குழு கண்டுபிடித்து கைது செய்த நிகழ்வு) படமாக்க முன்வந்து அதனை மிக சுவாரஸ்யமாக படமாக்கிய இயக்குநர் வினோத்திற்கு தமிழக காவல் துறை சார்பாக பாராட்டு பூங்கொத்து. 'காக்க காக்க', 'சிங்கம்' என காவல்துறை சார்ந்த படங்கள் மூலம் காவல்துறை அதிகாரி என்றால் சூர்யாதான் என்ற இடத்திற்கு தற்போது தீரன் கதாபாத்திரம் மூலம் கார்த்தி கடும் போட்டி கொடுக்கிறார். ஒரு நேரடி தேர்வு பெற்ற டிஎஸ்பியை கண்முன் நிறுத்துகிறார். ஆர்ப்பாட்டமில்லா ஆழமான நடிப்பு.

கார்த்தியின் கச்சிதமான உடல் மொழிக்கும் நடிப்புக்கும் ஒரு ரிவார்டு பார்சல். இசை (ஜிப்ரான்) படத்தோடு இணைந்து பயணிக்கிறது. செல்லமே பாடல் உங்களை கொஞ்சி செல்லும். பின்னணி இசை மிக நேர்த்தி. கதாநாயகி (ரகுல் ப்ரீத் சிங்) மற்றும் காதல் பகுதிகள் பகுதி மழை நேரத்து தேநீர் போல இதம். கேமரா காடு,மலை, மேடு, பாலைவனம் என அனைத்தையும் நம்மை உணர வைக்கும். பாலைவனத்தில் புழுதி பறக்கச் செல்லும் பேருந்து சண்டைக்காட்சி தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. குற்றவாளி கொடூரமானவன் என்று மட்டும் செல்லாமல் அதற்கான காரணத்தை மொகலாயர் காலத்தோடு சொல்வதில்படம் நெடுக இயக்குநர் மற்றும் குழுவினரின் ஹோம்ஒர்க்கை நாம் உணர முடியும். காவல் துறை காட்சிகளில் டீடெய்லிங் ரொம்ப பக்கா. வாழ்த்துகள் டைரக்டர் வினோத்.

இவர் படத்திற்கு நம்பிப் போகலாம் என்ற வரிசையில் தமிழ் சினிமாவில் உங்கள் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் ‘தோனி’ திரைப்படம் எப்படி பிடித்ததோ அதுபோல ஒவ்வொரு காவலருக்கும் இத்திரைப்படம் பிடிக்கும். காவல் துறை உண்மை நிலையைும், சூழ்நிலை நெருக்கதல்களையும் சேர்த்து படமாக்கியது பாராட்டத்தக்கது. தமிழ் சினிமாவின் போலீஸ் படங்களில் தீரனுக்கு கட்டாயம் இடம் உண்டு. தமிழக காவல்துறையில் தீரன்களும் அவர்தம் சாதனைகளும் அதிகம். எனவே 'தீரன் அதிகாரம் இரண்டு'க்கு தமிழ்நாடு காத்திருக்கும். பவேரியா ஆப்ரேசனில் பங்கேற்ற நண்பர்கள் விழுப்பரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்'' என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து