முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக்கூட்டம்: அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை - கவர்னரின் முதன்மை செயலாளர் விளக்கம்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கோவையில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வில் எந்த அரசியல் உள்நோக்கம் இல்லை என்று கவர்னர் பன்வாரிலாலின் முதன்மை செயலாளர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
கோவையில் சில நாட்களுக்கு முன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திடீர் என்று ஆய்வு நடத்தினார். மாவட்ட அதிகாரிகளிடம் வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்கள் குறித்து கவர்னர் பன்வாரிலால் கேட்டறிந்தார். இது ஒரு அரசியல் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்த நிலையில் இந்த புகார் குறித்து கவர்னர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமாக கருத்து

கவர்னரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.,

சில முக்கியமான பிரச்சினைகளில் தமிழக மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது என்னுடை கடமை. கோவையில் மாவட்ட அதிகாரிகளுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தியது பற்றி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம், தமிழகத்தில் அமல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட திட்டங்கள் தொடர்பானவைதான். இந்த ஆலோசனையை தமிழகத்தில் சில பிரிவினர் வரவேற்றுள்ளனர். அதேநேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் சட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு மாறானது என்று சிலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அரசியல் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டு கவர்னர் செயல்பட்டதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் அரசியல் நோக்கத்தோடு கவர்னர் செயல்பட்டதாக துரதிஷ்டவசமாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் உள்நோக்கம் ...

இந்த விமர்சனம் முற்றிலும் தவறானது. கற்பனை அடிபடையிலானது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுவார். அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் வகையில் அவருடைய செயல்பாடுகள் இருக்கும். அவர் சிறிய மற்றும் பெரிய நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியல் உள்நோக்கம் இருக்காது. தகுதியின் அடிப்படையிலேயே முடிவெடுப்பார். மாநில அரசின் வளர்ச்சி பணிகளுக்கு அவரது நடவடிக்கை ஆதரவாகவே இருக்கும். எனவே அவர் கோவையில் அவர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது அல்ல. விதிமுறைகளின் படியே அந்தக்கூட்டம் நடத்தப்பட்டது.

அரசியல் சட்டத்தின் படியே ...

அசாம் கவர்னராக அவர் இருந்தபோதே இதுபோல மாவட்ட அதிகாரிகளுடன் அவர் பல கூட்டங்களை நடத்தி உள்ளார். அப்படி நடத்தியபோது அவர், ஒருபோதும் விதிமுறைகளை மீறியதில்லை. வளர்ச்சி திட்ட தேவைகளை அறிவதற்கே அந்த கூட்டம் நடைபெற்றது. இதுபோன்ற அவரின் முயற்சிகள் தொடரும். பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டதன் படி அவர் தன் பொறுப்புகளை நிறைவேற்றுவார். அரசியல் சட்டத்தின் படியே அவரது செயல்பாடுகள் இருக்கும். தமிழக அமைச்சர்கள் பலரும் அவரது நடவடிக்கைகளை பாராட்டி ஆதரவும் தெரிவித்துள்ளனர். எனவே இதுபோன்ற கூட்டங்களை கவர்னர் நடத்துவதை அரசியல் சட்டத்தின் எந்தஇடத்திலும் தடுக்கவில்லை. கவர்னராக அவர் பதவியேற்றபோது சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறியுள்ளார். கவர்னர் பதவி என்ற கண்ணியத்தை அவர் தொடர்ந்து காப்பார்.
இவ்வாறு கவர்னரின் முதன்மை செயலாளர் அறிவிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து