முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மொபைல் நண்பர்' என்ற பெயரில் புதிய திட்டம் வீடு தேடி வரும் 40 வகை அரசு சான்றிதழ் சேவைகள்: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்துகிறது

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஓட்டுநர் உரிமம், ஆதார், வாக்காளர் அட்டை, சாதிச் சான்றிதழ் உட்பட 40 வகையான அரசுச் சான்றிதழ் சேவைகள் இனி டெல்லிவாசிகளின் வீடு தேடிவர உள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இந்த வித்தியாசமான திட்டத்தை அம்மாநிலத்தின் ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்துகிறது.

அரசுச் சான்றிதழ்கள் பெற வேண்டி நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் அதன் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதனால், அவர்களுக்கு பலமணி நேரம் வீணாவது வழக்கமாக உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டி இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு ஒருமுடிவு கட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசு சில மாதங்களில் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

இதன்படி, ஆதார், வாக்காளர் அட்டை, சாதிச் சான்றிதழ் அனைத்து வகையான அரசு சான்றிதழ்கள், மின்சாரக் கட்டணம், குடிநீர் மற்றும் வீட்டுவரி உட்பட 40 வகையான அரசு சேவைகள் செய்ய டெல்லிவாசிகளின் வீட்டிற்கே அரசு அலுவலர் வருவார். இதற்கு தேவையான சான்றிதழ்களை அரசு அலுவலர் டிஜிட்டல் முறையில் படம் எடுத்துப் பதிவு செய்து கொள்வார். எனவே, அவரிடம் அதற்கான நகல்களை பொதுமக்கள் தரத் தேவையில்லை.

'மொபைல் நண்பர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் அரசு வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம் தேவைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். பிறகு அவர்களுடன் பேசி நேரம் குறித்த பின் பொதுமக்கள் வீட்டிற்கு அரசு சார்பில் அலுவலர் வருவார். பணிக்குத் தேவையான மடிக்கணினி, கேமரா உட்பட அனைத்தையும் அரசு அலுவலர் கொண்டு வந்து சேவை செய்து தரும்படி திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் வாகனம் ஓட்டிக் காட்ட மட்டும் பொதுமக்கள் அரசு அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கான முடிவை கடந்த 16-ம் தேதி நடைபெற்ற டெல்லி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா கூறும்போது, ''இந்த சேவை விடுமுறை நாட்களிலும் கிடைக்க உள்ளது. இதனால், லஞ்சம் ஒழிக்கப்படும். இதன் பலன் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு வருகிறது. இப்பணியை செய்ய உகந்த தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இந்த 'மொபைல் நண்பன்' திட்டம் நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய உள்ளது'' எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து