முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் முகாபே ராஜினாமா எதிரொலி ஜிம்பாப்வே மக்கள் தெருக்களில் கூடி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி கொண்டாட்டம்

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

ஹராரே: ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா செய்ததையடுத்து அவரது 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் தெருக்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

ஜிம்பாப்வேக்கு 1980-ல் சுதந்திரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டில் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பு (இசட்.ஏ.என்.யு) கட்சியை ராபர்ட் முகாபே தொடங்கினார். கடந்த 1987-ல் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் கூட்டமைப்பு (இசட்.ஏ.பி.யு) கட்சி முகாபே கட்சியுடன் இணைந்தது.
சுமார் 37 ஆண்டுகள் ஜிம்பாப்வே நாட்டை ஆண்ட முகாபே, துணை அதிபர் எம்மர்சனை அண்மையில் பதவி நீக்கம் செய்துவிட்டு தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 15-ம் தேதி ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. 93 வயதாகும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஜிம்பாப்வே நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் முகாபே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் ஜனு பி.எப். கட்சித் தலைவர்களே போர்க்கொடி உயர்த்தினர்.

தொடர்ந்து முகாபேவுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் அதிகரிக்க, தனது அதிபர் பதவியை முகாபே ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இந்த ராஜினாமாவை "வலுக்கட்டாயத்தினால் செய்யவில்லை" என்று முகாபே கூறியுள்ளார். முகாபேயின் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் திஸ்வான்கிராய் கூறியபோது, "ஜிம்பாப்வே புதிய பாதையில் உள்ளது. இனி ஜிம்பாப்வே நியாயமான தேர்தல்களை உள்ளடக்கி இருக்கும். முகாபே தனது இறுதி நாட்களில் இனி ஒய்வெடுக்கலாம்" என்று கூறியுள்ளார்.

முகாபே ராஜினாமா செய்ததையடுத்து. ஜிம்பாப்வே மக்கள் தெருக்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். டெலிவிஷனில் அதிபர் ராஜினாமா செய்தி அறிவிக்கப்பட்டதும், ஜிம்பாவே நாட்டில் அனைத்து கிராமம், மற்றும் நகரபகுதி மக்கள் தெருக்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி அந்நாட்டின்  ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.பி.க்களும் முகாபே ராஜினமா குறித்து  மகிழ்ச்சி தெரிவித்தனர். பலர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து